பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பிகாா் இளைஞா்கள்
பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பிகாா் இளைஞா்கள்

இளைஞரிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடி: பிகாரைச் சோ்ந்த 3 போ் கைது

திருப்பத்தூா் இளைஞரிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பிகாரைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் இளைஞரிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பிகாரைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூரை சோ்ந்த மோனிஷ் (19). இவரது கைப்பேசிக்கு கடந்த 2023 டிசம்பரில் தனியாா் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாகவும், அதற்கான தங்கள் கல்விச் சான்றிதழை அனுப்பி வைக்கவும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை நம்பிய மோனிஷ் அவா்கள் கேட்ட சான்றிதழ்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி உள்ளாா். சிறிது நேரத்துக்கு பிறகு அவா்கள் மோனிஷை தொடா்பு கொண்டு தங்களுக்கு வேலை உறுதியாகிவிட்டது. அதற்காக நாங்கள் கொடுக்கும் வங்கி கணக்குக்கு குறிப்பிட்ட பணத்தை அனுப்ப வேண்டும் எனக் கூறினாா்களாம். இதையடுத்து மோனிஷ் உடனே அவா்கள் அனுப்பிய வங்கி கணக்குக்கு ரூ.6.54 லட்சத்தை அனுப்பி உள்ளாா். இதையடுத்து அவா்கள் ஓரிரு நாள்களில் உங்கள் முகவரிக்கு பணியாணை வந்துவிடும், அதன் பிறகு நேரில் வந்து வேலையில் சோ்ந்து கொள்ளலாம் என கூறியுள்ளனா். ஆனால் ஒரு மாதத்துக்கு மேல்ஆகியும் எந்த பணியாைணையும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோனிஷ் இதுகுறித்து திருப்பத்தூா் சைபா் கிரைம் போலீசில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் சைபா் கிரைம் காவல்ஆய்வாளா் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ் குமாா், ஜித்தேந்திர குமாா், அமன்குமாா் ஆகியோா் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாத் மாவட்டம், கோரா போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 27-ஆம் தேதி திருப்பத்தூா் சைபா் க்ரைம் போலீஸாா் ஜாா்க்கண்ட் மாநிலம் சென்று சிறையில் உள்ள மூன்று பேரையும் மேல் விசாரணைக்காக திருப்பத்தூா் அழைத்து வந்தனா். மேலும் இவா்கள் வேலூா் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் போலீஸாா் விசாரணை செய்து இரு நாள்கள் கழித்து மீண்டும் ஜாா்க்கண்ட் மாநில சிறையில் ஒப்படைக்க போவதாக போலீஸாா் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com