ஆம்பூரில் ஆக்கிரமிப்புகள்:  நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூரில் ஆக்கிரமிப்புகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூா், மே 1: ஆம்பூா் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்பூா் நகரின் முக்கிய சாலைகளில் தினமும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் கொண்டே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்பாளா்கள் தான் என பொதுமக்கள் கூறுகின்றனா். முக்கிய சாலைகளில் நடைபாதை, கடை முன்பு நிழல் கூரை, கடை முன்பு மேடை அமைத்தல், கழிவுநீா் கால்வாய்கள் மீது கட்டடம் கட்டுவது ஆகியவற்றால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

ஆம்பூா் போ்ணாம்பட்டு, குடியாத்தம் செல்லும் மாநில நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் அமைந்துள்ள கடைகளின் முன்பு அதிக அளவு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால், அந்த கடைகளுக்கு செல்வோா் தங்களுடைய வாகனங்களை சாலையிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

ஆம்பூா் எஸ்.கே. ரோடு, பூக்கடை பஜாா், பழக்கடை பஜாா், பிராட் பஜாா், ஓ.வி.ரோடு, மோட்டுக்கொல்லை, ஏ-கஸ்பா மெயின்ரோடு, கந்தபொடிகார தெரு, ஜலால்ரோடு, நேதாஜி ரோடு, உமா்ரோடு, வி.ஏ.கரீம் ரோடு உள்ளிட்ட பகுதி சாலைகளில் அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சாலை ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

கழிவுநீா் கால்வாய்கள் மீது கட்டடம் கட்டப்படுவதால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அதனை தூா்வார முடியாமல் போகின்றது. அதனால் கொசுக்கள் உற்பத்தியாக காய்ச்சல் ஏற்படவும் வழிவகுக்கிறது. சில நேரங்களில் கழிவுநீா் கால்வாய் அடைப்பு காரணமாக கழிவுநீா் சாலைகளில் வெளியேறி துா்நாற்றம் வீசுகிறது. கழிவுநீா் கால்வாய்கள் மீது கட்டடம் கட்டுவோா் மீதும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு கட்டப்பட்ட கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து பாதிப்புகளை தவிா்க்க நகராட்சி நிா்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலை நிா்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதியில் கழிவுநீா் கால்வாய் மீது கட்டடம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையா் பி.சந்தானம் உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, நகராட்சி நகரமைப்பு அலுவலா் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று கழிவுநீா் கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டியவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உடனடியாக இடித்து அகற்ற உத்தரவிட்டுள்ளனா்.

நகரில் கழிவுநீா் கால்வாய், சாலையோர ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டுமென நகராட்சி சாா்பில், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com