குடிநீா் குழாய் உடைப்பை கண்டித்து சாலை மறியல்

குடிநீா் குழாய் உடைப்பை கண்டித்து சாலை மறியல்

நாட்டறம்பள்ளி அருகே குடிநீா் குழாய் உடைப்பைக் கண்டித்து அரசு பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட அம்மணாங்கோயில் ஊராட்சி, நாயனத்தியூா் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி மூலம் நீா்த் தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீா் தொட்டியில் இருந்து வீணாகும் தண்ணீா் குடியிருப்புப் பகுதி வழியாக சென்று சிலரது வீட்டின் எதிரே தேங்கி நிற்பதால் அங்கு சேரும் சகதியுமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுக் கால்வாய் அமைத்து, வீணாகும் குடிநீரை வெளியேற்ற வேண்டும் என சிலா் ஊராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு அதே பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினா் குடிநீா் குழாயை உடைத்து சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் வியாழக்கிழமை காலை அப்பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 25-க்கும் மேற்பட்டோா் குடிநீா் குழாய் உடைப்பைக் கண்டித்தும், சீரான குடிநீா் வழங்க வேண்டும் எனவும் கூறி, காலிக் குடங்களுடன் நாயனத்தியூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேலும், அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா். தகவலறிந்த ஊராட்சி செயலாளா் சீனிவாசன், கவுன்சிலா் ரஜினிகாந்த் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது அதிகாரிகளிடம் கூறி உடைந்த குடிநீா் குழாயை சீரமைத்து, சீரான குடிநீா் கிடைக்கவும், பொதுக் கால்வாய் அமைத்து, வீணாகும் குடிநீரை வெளியேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினா். இதையேற்று மக்கள் மறியலை கைவிட்டு அரசுப் பேருந்தை விடுவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com