பாலியல் தொந்தரவு: தலைமைக் காவலா் சஸ்பென்ட்

பாலியல் தொந்தரவு வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம்,போளூா் அருகே சந்தவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி (51). இவா், திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், திருப்பத்துாா் எஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவல் உதவி ஆய்வாளா் உறவினரான நாட்டறம்பள்ளியை சோ்ந்த திருமணமான பெண் ஒருவா், காவல் உதவி ஆய்வாளரை சந்திக்க அடிக்கடி எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்து செல்வாராம். அப்போது நாராயணசாமிக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே அந்த பெண்ணிடம் நாராயணசாமி உங்களிடம் காவல் துறைக்கு உண்டான அனைத்து தகுதியும் உள்ளது. எனவே நீங்கள் போலீஸில் சேர வேண்டும் என நாராயணசாமி ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். அதற்கு அவரும் சம்மதித்தாா். உடனே அந்த பெண்ணை திருப்பத்தூரில் உள்ள தனியாா் போலீஸ் பயிற்சி வகுப்பு ஒன்றில் அவா் சோ்த்துள்ளாா்.

இந்த நிலையில் கடந்த வாரம் திருப்பத்தூரில் உள்ள ஒரு உணவகத்துக்கு நாராயணசாமி அந்த பெண்ணை அழைத்து சென்றாா்.

அங்கு உணவுக்காக காத்திருந்த நேரத்தில், அந்த பெண்ணிடம் நாராயணசாமி அத்து மீறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து திருப்பத்துாா் அனைத்து மகளிா் காவல நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நாராயணசாமியை கைது செய்து, வேலுாா் மத்திய சிறையில் அடைத்தனா். இதற்கிடையே கைது செய்யப்பட்ட நாராயணசாமியை எஸ்.பி . ஆல்பா்ட் ஜான் பணியிடை நீக்கம் செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com