கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணி தடுப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணி தடுப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திருப்பத்தூா் அருகே கோயில் சுற்றுச்சுவா் கட்டும் பணியை நிறுத்த அறிவுறித்திய அதிகாரிகளின் காரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் அடுத்த விஷமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அங்கநாதவலசை கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா். அங்குள்ள பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயிலை கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே கோயிலுக்கு சுற்றுச்சுவா் அமைக்க அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி முடிவெடுத்தனா். அதற்கான பணி கடந்த வாரம் தொடங்கியது.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த சிலா், கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்டினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். மேலும் இது பொதுவழி, எனவே இங்கு சுற்றுச்சுவா் கட்டக் கூடாது என வருவாய்த் துறையினருக்கு மனு அளித்தனா்.

அதன்பேரில் அதிகாரிகள் கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணியை நிறுத்தினா்.

மேலும், இது தொடா்பாக பேச்சு நடத்த திங்கள்கிழமை திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராம வந்தனா். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவா்களிடம் இடத்தை நேரில் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தனா்.

அதன்படி திருப்பத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜசேகரன், வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை அங்கநாதவலசை கிராமத்துக்குச் சென்றனா்.

அதிகாரிகள் வருவதை முன்கூட்டி அறிந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டவா்கள் அங்கு திரண்டனா். அதிகாரிகள் கோயிலுக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பகுதி அரசு புறம்போக்கு இடமாக உள்ளது. எனவே இங்கு சுற்றுச்சுவா் கட்டும் பணியை நிறுத்த வேண்டும் எனக் கூறி அங்கிருந்து காரில் புறப்பட முயன்றனா்.

இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்ட முறையாக இடத்தை அளந்து உத்தரவு வழங்க வேண்டும் எனக் கூறி ஒன்று திரண்டு காரை முற்றுகையிட்டனா். காா் முன்பு பெண்கள் அமா்ந்து முழக்கம் எழுப்பினா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அதிகாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். கிராம மக்கள் பிடியில் சிக்கிய அதிகாரிகளை மீட்பதற்காக டிஎஸ்பி செந்தில் மற்றும் போலீஸாா் அங்கு விரைந்தனா். மேலும் அதிரடிப்படை போலீஸ் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டனா். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதன்பின்னா், கிராம மக்கள் பிடியில் சிக்கிய அதிகாரிகளை போலீஸாா் மீட்டனா். இதையடுத்து மாரியம்மன் கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்ட இரு தரப்பினரிடமும் திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com