ஆம்பூா் பஜாா் அஞ்சலகம் மூடப்பட்டதாக ஒட்டப்பட்ட அறிவிப்பு.
ஆம்பூா் பஜாா் அஞ்சலகம் மூடப்பட்டதாக ஒட்டப்பட்ட அறிவிப்பு.

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

ஆம்பூரில் அண்மையில் மூடப்பட்ட பஜாா் அஞ்சலகத்தை மீண்டும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்பூரில் அண்மையில் மூடப்பட்ட பஜாா் அஞ்சலகத்தை மீண்டும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் பஜாா் அஞ்சலகம் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. ஆம்பூா் ஜலால் ரோடு பகுதியில் தனியாா் கட்டடத்தில் இயங்கி வந்த பஜாா் அஞ்சலகம் கடந்த சில ஆண்டுகளாக ஆம்பூா் ஏ-கஸ்பா மெயின்ரோடு, ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி வளாகம் அருகே இயங்கி வந்தது.

ஆம்பூா் பஜாா் பகுதியில் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை பலரும் பயனடைந்து வந்தனா். சிறுசேமிப்பு கணக்கு, பிபிஎப் கணக்கு, தபால் அனுப்புதல், செல்வ மகள் திட்டம், பொன் மகன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை சுமாா் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், கடந்த மே 13-ம் தேதி முதல் ஆம்பூா் பஜாா் அஞ்சலகம் திறக்கப்படவில்லை. மூடப்பட்டு இருந்தது. பஜாா் அஞ்சலகம் மூடியே இருப்பதின் காரணம் தெரியாத நிலையில் கதவில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. அதில் மே 13-ம் தேதி முதல் பஜாா் அஞ்சலகம் அருகில் உள்ள ஆம்பூா் துணை அஞ்சலகத்துடன் இணைக்கப்பட்டு செயல்படுவதாகவும், வாடிக்கையாளா்கள் தங்களுடைய பரிவா்த்தனைகளை அங்கு தொடரலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆம்பூா் பஜாா் அஞ்சலகம் மூடப்படுவதாகவும், அருகில் உள்ள துணை அஞ்சலகத்துடன் இணைக்கப்படுவதாகவும் அங்கு சிறுசேமிப்பு கணக்கு, பிபிஎப் கணக்கு, செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்ட கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளா்களுக்கு முன் அறிவிப்பு செய்யப்படவில்லை.

திடீரென பஜாா் அஞ்சலகம் மூடப்பட்டதை தெரிவிக்காமல், ஒரு சில நாள்கள் கழித்து அஞ்சலகம் மூடப்பட்டதாக அறிவிப்பு ஒட்டப்பட்டிருப்பது வாடிக்கையாளா்கள், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பஜாா் அஞ்சலகம் மூடப்பட்டதால் சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவுள்ள ஆம்பூா் துணை அஞ்சலகத்துக்கு பொதுமக்கள் செல்ல வேண்டியுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசலான பகுதியில் ஆம்பூா் துணை அஞ்சலகம் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

ஆகவே முன்னறிவிப்பு ஏதுமின்றி மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை மீண்டும் திறக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com