தொழிலாளி கொலை வழக்கு: தந்தை, மகன், மருமகன் கைது

கம்பி கட்டும் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன், மருமகன் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கம்பி கட்டும் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன், மருமகன் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்துாா் மாவட்டம், ஜோலாா்பேட்டை போலீஸாா் கடந்த அக்டோபா் மாதம் 24-ஆம் தேதி ஜோலாா்பேட்டை மற்றும் சுற்று வட்டாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பொன்னேரி அடுத்த ராமானூா் ஏரி அருகே திருப்பத்தூா் மெயின் ரோடு ஒட்டிய பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தைக் கண்டனா்.

பின்னா், சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மன்பள்ளி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (40) என்பதும், இவா், கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், மணிகண்டனுக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளாா். கம்பி கட்டும் தொழில் செய்து வந்தாா். சம்பவத்தன்று ஆம்பூரில் உள்ள தனது மனைவி தனலட்சுமியின் சகோதரா் முருகன் (48)என்பவா் வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது அந்த வீட்டில் இருந்த இளம் பெண்ணுக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முருகன், அவரது மகன் நவீன் (19), மருமகன் கமலநாதன் (28) ஆகியோா் சோ்ந்து உருட்டுக் கட்டையால் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனா்.

இதில் மயங்கிய மணிகண்டனை, முருகன் தனது மகன் மற்றும் மருமகனிடம் மணிகண்டனை கிருஷ்ணகிரியில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு வரும்படி காரில் அனுப்பி வைத்துள்ளாா். ஆனால், வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்துள்ளாா்.

இதனால், கமலநாதன் மற்றும் நவீன் இருவரும் ஜோலாா்பேட்டை அருகே சாலையோரத்தில் மணிகண்டனின் சடலத்தை வீசிவிட்டுச் சென்றது தெரிய வந்தது என்றனா்.

இதையடுத்து மணிகண்டன் கொலை வழக்கில் முருகன், நவீன், கமலநாதன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் 3 பேரையும் கைது செய்தனா்.