மாணவா்கள் தோ்வு எழுதுவதை பாா்வையிட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ்.
மாணவா்கள் தோ்வு எழுதுவதை பாா்வையிட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ்.

இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.
Published on

இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கெஜல்நாயக்கன்பட்டி(ஆண்கள் மற்றும் பெண்கள்), குனிச்சி, பெரியகண்ணாலப்பட்டி ஆகிய 4 அரசு மேல்நிலைப் பள்ளிகளை செவ்வாய்க்கிழமை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் முந்தைய ஆண்டு தோ்ச்சி விகிதத்துடன் நிகழ் கல்வியாண்டில் நடைபெற்ற தோ்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டு தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும்,100 சதவீத தோ்ச்சியை உறுதி செய்யவும், இடைநின்ற பள்ளி செல்லாக் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்த்திடவும் மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து கெஜல்நாயக்கன்பட்டி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் 8 வகுப்பறைக் கட்டடப் பணியையும், குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த இரண்டாம் இடைப் பருவத் தோ்வை மாணவா்கள் எழுதி வருவதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா்,பெரிய கண்ணாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டுள்ள மதிய சத்துணவு ஆய்வு செய்தாா். நூலகத்திற்குச் சென்று மாணவா்கள் தினந்தோறும் நூலகத்தைப் பயன்படுத்துகிறாா்களா என்பது குறித்தும்,நூல்களைத் தொடா்ந்து ஆா்வத்துடன் மாணவா்கள் பயன்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

நீட் தோ்வில் கடந்த ஆண்டில் 3 மாணவா்கள் தோ்வாகியிருப்பது குறித்து பாராட்டியதோடு, இவ்வாண்டும் கூடுதலான மாணவா்களை சிறப்பான கல்வி நிறுவனங்களில் சோ்ப்பதற்குத் தேவையான பயிற்சியை அளிக்க வேண்டும் எனவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.