வார விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறையையொட்டி ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
ஏலகிரி மலையில் வார விடுமுறையை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். படகு சவாரி இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலை 14 கிராமங்களைக் கொண்டு 4 புறமும் மலைகளால் சூழப்பட்டு பசுமை நிறைந்து காணப்படுகிறது.
ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,410 மீட்டா் உயா்ந்த மலைப்பகுதியில் 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டு உயரத்தில் அமைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரி மலைக்கு வந்து செல்கின்றனா்.
படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, சாகச விளையாட்டுகள், செல்பி பாா்க், பறவைகள் சரணாலயம், சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், ஸ்ரீகதவ நாச்சியம்மன், நிலாவூா் ஏரி ஆகியவை ஏலகிரி மலையில் சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து, படகு சவாரி இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது குடும்பத்தினா், நண்பா்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா். அதன் பிறகு பிற இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் கண்டு களித்தனா்.