தோ்தலின்போது தவறான தகவல்களை தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வழக்கு ஒத்திவைப்பு

சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி ஆஜராகாததால் அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்கு வழக்கை திருப்பத்தூா் நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
Published on

சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி ஆஜராகாததால் அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்கு வழக்கை திருப்பத்தூா் நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி போட்டியிட்டாா். அப்போது தோ்தல் ஆணையத்தில் அவா் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை கொடுத்திருப்பதாக சா்ச்சை எழுந்தது. இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு கே.சி. வீரமணி மீது வேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் ராமமூா்த்தி என்பவா் இந்திய தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தாா். அதில், தோ்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தன் சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை அளித்திருப்பதாகவும், அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தனது புகாரில் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்திலும் தொழிலதிபா் ராமமூா்த்தி வழக்கு தொடா்ந்தாா். புகாரை விசாரித்து கே.சி. வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தோ்தல் அதிகாரிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தோ்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், திருப்பத்தூா் ஜேஎம் 1-ஆவது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை (நவ. 26) முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. அதன்பேரில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் ஜேஎம் 1-ஆவது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி ஆஜராகாததால், இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமி அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.