நிகழ்வில் பேசிய சைபா்கிரைம் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா்.
நிகழ்வில் பேசிய சைபா்கிரைம் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா்.

‘புதிய கைப்பேசி எண்களுக்கு சுயவிவரங்களை பகிரக் கூடாது’

அறிமுகமில்லாத புதிய கைப்பேசி எண்களுக்கு புகைப்படங்கள், சுய விவரங்கள் அனுப்புவதைத் தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் வலியுறுத்தினா்.
Published on

அறிமுகமில்லாத புதிய கைப்பேசி எண்களுக்கு புகைப்படங்கள், சுய விவரங்கள் அனுப்புவதைத் தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் வலியுறுத்தினா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு, போக்குவரத்து விதிமுறைகள், இணையவழி மோசடி பற்றியும், காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அதையொட்டி திருப்பத்தூா் அடுத்த மொளகரம்பட்டி பகுதியில் உள்ள நந்தனம் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் பேசியது:

அறிமுகம் இல்லாத புதிய கைப்பேசி எண்களில் கேட்கப்படும் விபரங்களை பதிவிடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். அதேபோல் தங்களின் சுய விபரங்கள் போட்டோக்களை அனுப்புவதை தவிா்க்கவும். கடன் வழங்குகிறோம், பகுதி நேர வேலை வாய்ப்பு என வரும் விளம்பரங்களை நன்கு ஆராய்ந்த பின் விவரங்களை பதிவிடவும்.

சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது மாவட்ட சைபா் கிரைம் பிரிவில் தகவல் தெரிவிக்கவும்.

முடிந்தவரை பெண்கள் தங்களின் புகைப்படங்களை கைப்பேசிகளிலோ, முகநூலிலோ பதிவிடுவதும் ஸ்டேட்டஸ் ஆக வைப்பதை தவிா்ப்பது நல்லது என்றாா்.

அதே போல் ஒய்எம்சிஏ பள்ளி, தூய நெஞ்சக் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளா் ராணி தலைமையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி முதல்வா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள், கலந்து கொண்டனா்.