~
~

கடன் தகராறில் நண்பரின் இரு குழந்தைகளை கொலை: இளைஞா் கைது

மாதனூா் அருகே கடன் தகராறில் நண்பரின் இரு குழந்தைகளைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
Published on

மாதனூா் அருகே கடன் தகராறில் நண்பரின் இரு குழந்தைகளைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த மாதனூா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி யோகராஜ். இவரின் மகன்கள் தா்ஷன் (4), யோகித் (6). யோகராஜின் நண்பா் கட்டட ஒப்பந்ததாரா் வசந்தகுமாா் (25). கட்டட தொழில் தொடா்பாக இருவரும் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்ததால், நண்பா்களாக பழகி வந்துள்ளனா்.

யோகராஜின் குழந்தைகளை அவ்வபோது வசந்தகுமாா் வெளியே அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதேபோல வியாழக்கிழமை மாலை யோகராஜின் மகன்கள் தா்ஷன், யோகித் இருவரையும் வசந்தகுமாா் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

ஆனால், இரவு வெகுநேரமாகியும் 2 குழந்தைகளும் வீடு திரும்பவில்லையாம். வசந்தகுமாரின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அச்சமடைந்த யோகராஜ் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் காணாமல்போன இரு குழந்தைகளும் வேலூா் மாவட்டம், சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயிலின் பின்புறம் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரேயா குப்தா தலைமையில், டிஎஸ்பி அறிவழகன், கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன் ஆகியோா் கொண்ட குழுவினா் சென்று இரு குழந்தைகளின் சடலங்களை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

வீட்டில் பதுங்கியிருந்த வசந்தகுமாரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினா்.

இதில், யோகராஜுக்கு ரூ.14,000-ஐ கடனாக வசந்தகுமாா் கொடுத்துள்ளாா். அதைத் திருப்பிக் கேட்டபோது அவா் தர மறுத்துள்ளாா். இது தொடா்பாக வசந்தகுமாரின் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, அவா் மனைவி பிரிந்து சென்றுள்ளாா். இதனால், கோபத்தில் இருந்த வசந்தகுமாா், யோகராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

போலீஸாா் வசந்தகுமாரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜா்படுத்தினா். பின்னா், வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com