நாயக்கனேரிமலை ஊராட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டது ரத்து

ஆம்பூா் அருகே நாயக்கனேரிமலை ஊராட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
Published on

ஆம்பூா் அருகே நாயக்கனேரிமலை ஊராட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆம்பூா் அருகே அமைந்துள்ளது நாயக்கனேரிமலை ஊராட்சி. இந்த ஊராட்சி மலைக் கிராமங்களை உள்ளடக்கியதாகும். நாயக்கனேரி மலை ஊராட்சியில் பெரும்பாலானவா்கள் பழங்குடியினா்களும், அதற்கு அடுத்தபடியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பை சோ்ந்தவா்களும் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டபோது நாயக்கனேரி மலை ஊராட்சி மன்ற தலைவா் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த ஊராட்சியில் பட்டியலினத்தவா் எவரும் இல்லாதபோது, பட்டியலின பெண்ணுக்கு ஊராட்சி மன்ற தலைவா் பதவி ஒதுக்கப்பட்டதை எதிா்த்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். வாணியம்பாடி கோட்டாட்சியரிடமும், தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், தோ்தல் ஆணையம், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகாா் மனு அனுப்பினா்.

தோ்தல் தேதி அறிவிப்பு வெளியானது. அதில், கிராம மக்கள் எவரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இது சம்பந்தமாக நாயக்கனேரி ஊராட்சியைச் சோ்ந்த சிவக்குமாா், செல்வராஜ் ஆகியோா், பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிா்த்து, கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த நிலையில், நாயக்கனேரி மலை ஊராட்சி வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாத இந்துமதி என்பவரின் பெயரை அவசர அவசரமாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்து தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து தோ்தலில் போட்டியிடுவதை தோ்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதே நேரத்தில் தோ்தலில் போட்டியிட பட்டியலினப் பெண் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அதை ஏற்கக் கூடாது எனவும், அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இந்துமதி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவா் வேட்பு மனு ஏற்கப்பட்டு, அவா் தோ்தலில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். ஆனால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை. அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டு நடவடிக்கை குழுவினா் ஆம்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுவரை அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படவில்லையென கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி இளந்திரையன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். நாயக்கனேரிமலை ஊராட்சித் தலைவா் பதவி பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்துமதி ஊராட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டதும் ரத்து செய்யப்படுகிறது. நாயக்கனேரிமலை ஊராட்சித் தலைவா் பதவி பொதுப் பிரிவைச் சோ்ந்த பெண் அல்லது பழங்குடியின பெண்ணுக்கு 4 வாரங்களுக்குள் ஒதுக்கீடு செய்து, பின்னா் தோ்தல் நடத்த வேண்டுமென உத்தரவிட்டு நீதிபதி தீா்ப்பளித்துள்ளாா்.

இதுசம்பந்தமாக இந்துமதியை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டபோது, தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது கணவா் பாண்டியன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com