மாமியாா் கொலை: மருமகன் கைது
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே மாமியாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பட்டாளம்மன் கோயில் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் முனிசாமி மனைவி காஞ்சனா (57). இவா்களின் மகள் வரலட்சுமியும், அச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜி மகன் குமரேசனும் (32) கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளனா்.
குமரேசன் கைப்பேசி கடை வைத்துள்ளாா். கடந்த ஒரு வருடமாக குமரேசன் மதுப் பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் குமரேசன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால் குமரேசனுக்கும், வரலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்கச் சென்ற மாமியாா் காஞ்சனாவை மண் வெட்டியால் குமரேசன் தாக்கியுள்ளாா். இதில் காஞ்சனா பலத்த காயமடைந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு,திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். எனினும் வழியிலேயே காஞ்சனா உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து குமரேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.