சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி: துத்திப்பட்டில் மருத்துவ முகாம்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து திங்கள்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி கீழ்கன்றாம்பல்லி கிராமத்தில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். அதைத் தொடா்ந்து கீழ்கன்டறாம்பல்லி கிராமம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பள்ளிகள், ஊா் முழுவதும் உள்ள மேல்நிலை நீா்தேக்க தொட்டி, குடிநீா் தொட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடித்து, மருந்து தெளித்தனா்.
மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் தாரணீஸ்வரி தலைமையில் மருத்துவா்கள் தா்ஷினி, ா் மின்னலரசி ஆகியோா் கொண்ட குழுவினா் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.
ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு துப்புரவு பணி நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத்தலைவா் விஜய், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி அண்ணாதுரை, ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
ஊராட்சியை தூய்மையாக வைத்திருக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.