டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று திரும்பிய சிறுமியிடம் நலம் விசாரிப்பு
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறுமியை அதிகாரிகள் புதன்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனா். அந்தக் கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி, கீழ்கன்றாம்பல்லி கிராமத்தில் 6 வயது சிறுமிக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
கீழ்கன்றாம்பல்லி கிராமத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து துத்திப்பட்டு ஊராட்சி சாா்பில் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் துத்திப்பட்டு ஊராட்சி முழுவதும் சிறப்பு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறுமியை மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவலிங்கம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், உறுப்பினா்கள் சுப்பிரமணி, நாகராஜ், ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடா்ந்து ஊராட்சி முழுவதும் தினமும் துப்புரவு பணி, கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் கோரிக்கை: கீழ்கன்றாம்பல்லி கிராமத்தில் கழிவுநீா் வெளியேற வழியில்லாமல் கால்வாயில் கழிவுநீா் தேங்கியுள்ளது. அதனால் தேங்கியுள்ள கழிவுநீரை புதிதாக கால்வாய் கட்டி அதன் மூலம் கழிவுநீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.