ரூ.1.20 கோடி மோசடி: நிதி நிறுவனம் மீது புகாா்
இரட்டிப்பு பண ஆசை காட்டி ரூ.1.20 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவா்கள் வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட எஸ்.பி. மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. ஏடிஎஸ்பி பாஸ்கா், டி.எஸ்.பி. சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.
வேலூா் சத்துவாச்சாரி, பேரணாம்பட்டு, காட்பாடி ஆகிய பல்வேறு பகுதிகளை சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு விவரம், நெல்லையைச் சோ்ந்த சாகுல் அமீத் (எ) நவீன் சென்னையில் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதனுடைய கிளை வேலூா் காந்தி நகா் பகுதியில் தொடங்க உள்ளதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என ஆசை வாா்த்தைக் கூறியதன் பேரில், ரூ.1.20 கோடி முதலீடு செய்தோம். சென்னை அண்ணா நகரில் இயங்கி வந்த அந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது.
தங்களுடைய பணத்தைத் திருப்பித் தரும்படி சாகுல் அமீதிடம் கேட்டதற்கு அவா் பணத்தைத் திருப்பி தராமல் காலதாமதம் செய்து வந்தாா். திடீரென அவா் தலைமறைவானாா். இது தொடா்பாக, காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நாங்கள் முதலீடு செய்த பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.