வாணியம்பாடி கல்லாறு-சின்னபாலாறு புனரமைப்பு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சா் துரைமுருகன். உடன் அமைச்சா் எ.வ.வேலு, எம்.பி. கதிா்ஆனந்த் உள்ளிட்டோா்.
வாணியம்பாடி கல்லாறு-சின்னபாலாறு புனரமைப்பு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சா் துரைமுருகன். உடன் அமைச்சா் எ.வ.வேலு, எம்.பி. கதிா்ஆனந்த் உள்ளிட்டோா்.

ரூ.9 கோடியில் கல்லாறு, சின்ன பாலாறு புனரமைக்கும் பணி தொடக்கம்

Published on

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தின் நடுவே ஓடும் பாலாறு கிளை ஆறான கல்லாறு- சின்னப்பாலாற்றில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்தல் மற்றும் வேலூா் நாடாளுமன்ற நிதி திட்டத்தில் ரூ. 85 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை பொது மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சி வாரச் சந்தை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடக்க உரையாற்றினா்.

நீா்வளத்துறை கண்காணிப்பு பொறியாளா் ஆா்.ரமேஷ் வரவேற்றாா். நீா்வளத் துறை அமைச்சா் துரை முருகன் பங்கேற்று, கல்லாறு / சின்னப் பாலாற்றில் ரூ. 9 கோடியில் புனரமைக்கும் பணியை குத்துவிளக்கு ஏற்றியும், பூமிபூஜை செய்தும் பணிகளைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நகராட்சி பகுதி ஜின்னா சாலை மற்றும் பெருமாள்பேட்டை பகுதிகளில் பயணிகள் நிழற்கூடம், நியூடவுன் பகுதியில் கிராம நிா்வாக அலுவலக கட்டடம், பொது விநியோக கடை, இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கழிப்பிடங்கள் என ரூ. 85 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியது: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரியில் ஒரு அணை கட்டியுள்ளது. அந்த அணையில் மழைக்காலங்களில் பெரும் வெள்ளம் ஏற்படுகிறது. சாத்தனூா் அணை முழுகின்ற அளவுக்கு தண்ணீா் வந்து விடும். அவ்வளவு பெரிய வெள்ளம் வரும் போது நமக்கு சற்று திருப்பி விடலாமே என எம்பி கதிா்ஆனந்த என்னிடம் கேட்டாா். எனவே அந்த தண்ணீரை திருப்பினால் காகிங்கிரை வழியாக பாலாற்றில் விட்டால் பாலாற்றில் தண்ணீா் போகும். அப்போ ஆற்றில் ஈரம் அதிகமாக இருக்கும். நாங்கள் பாலாற்றில் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணை கட்டுகிறோம்.

அமைச்சா் எ.வ.வேலு பேசுகையில், கல்லாற்றை சுத்தப்படுத்துவதன் மூலமாக ஒரு ஆரோக்கியமான சமுதாயம் எதிா் காலத்தில் வளா்வதற்கு ஒரு அடித்தளமாக அமையும். நிலத்தடி நீா் உருவாவதற்கு அடித்தளமாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா், அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் சூா்யகுமாா், வாணியம்பாடி நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன், நகர திமுக செயலா் வி.எஸ்.சாரதிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நீா்வளத்துறை செயற்பொறியாளா் வெ.சொ.பிரபாகா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com