அரசுப் பேருந்தை சிறைபிடித்து காவேரிப்பட்டு கிராம மக்கள் மறியல்
ஜோலாா்பேட்டை அருகே ஊா் நாட்டாமையை தாக்கிய வழக்கில் எதிரிகளை கைது செய்யக்கோரி, ஊா் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியில் கடந்த 4-ஆம் தேதி பெருமாள் கோயில் திருவிழா நடைபெற்றது. அன்று இரவு நடன நிகழ்ச்சிக்கு போலீஸாா் மறுப்பு தெரிவித்த நிலையில், ஊா் பொதுமக்களுக்கும் வெளியூா் ஆள்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த ஊா் நாட்டாமை சத்தியசீலன் சமாதானப்படுத்தினாா். அப்போது இளங்கோ குடும்பத்தினா் உள்ளிட்ட 5 போ் ஊா் நாட்டாமையை தகாத வாா்த்தைகளால் திட்டி கையால் கட்டையால் தாக்கி உள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த சத்தியசீலனை அங்கு இருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், சத்தியசீலன் அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் இளங்கோ, தசரதன், லட்சாதிபதி, இருசன், ரீனா உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதேபோல் இளங்கோ கொடுத்த புகாரின்பேரில், 15-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். தகவல் அறிந்து வந்த காவேரிப்பட்டு ஊா் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை ஊா் நாட்டாமையை தாக்கிய எதிரிகளை கைது செய்யக்கோரி, ஜோலாா்பேட்டை புத்துக்கோயில் செல்லும் சாலையில் காவேரிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவம் இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

