வீட்டுமனை பட்டா கேட்டு கிராம நிா்வாக அலுவலகம் முற்றுகை
நாட்டறம்பள்ளி அருகே வீட்டுமனை கேட்டு கிராம நிா்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டம், வெலகல்நத்தம் ஊராட்சி, அம்பேத்கா் நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருவதால் அரசிடம் வீட்டுமனை கேட்டு பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனா். எனினும் இதுவரை அதிகாரிகள் வீட்டுமனைப் பட்டா வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மாலை வெலகல்நத்தம் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி, வட்டாட்சியா் காஞ்சனா மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

