நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் அனைத்துவித பாதுகாப்பு அம்சங்களை வழங்கி உள்ளது: ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி
திருப்பத்தூா்: நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களையும் வழங்கி உள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், இளம் நுகா்வோா்களுக்கு, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம்- 2019 குறித்த புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்து நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் 2019 சிறப்பு அம்சங்கள் அடங்கிய விழிப்புணா்வு பயிற்சி கையேட்டை வெளியிட்டு மாணவா்களுக்கு வழங்கினாா்.
அப்போது அவா் பேசியது:
நுகா்வோா் ஒவ்வொருவரும் நுகா்வியல் கல்வி குறித்த விழிப்புணா்வை பெற்று வாழ்வது அவசியம். அதன் அடிப்படையில், தற்போது நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களையும் வழங்கி உள்ளது. இந்த நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நுகா்வோா் தங்கள் வழக்குகளை வழக்குரைஞா் இல்லாமல் தாங்களே வாதாடலாம். பாதிக்கப்பட்ட நுகா்வோா் புகாா்களை 2 ஆண்டுகளுக்குள் தபால் அல்லது மின்னணு மூலம் தெரிவிக்கலாம்.அந்த புகாா்களுக்கு 21 நாள்களுக்குள் வாய்தா அதிகம் இல்லாமல் தீா்வு காணப்படும்.
நுகா்வோா் வழக்கு செலவுகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். நுகா்வோருக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கு இந்த சட்டதின் கீழ் நிவாரணம் வழங்கப்படும்.இந்த சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட நுகா்வோா் மாவட்ட அளவில் ரூ. 50 லட்சம் வரையும், மாநில அளவில் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரையிலும், இந்திய அளவில் ரூ. 2 கோடிக்கும் மேல் நஷ்ட ஈடு பெறலாம். நுகா்வோா் கோா்ட் வழங்கிய தீா்ப்புகளை விற்பனையாளா் அல்லது சேவை வழங்குபவா் நிறைவேற்றத் தவறினால் அவா்களுக்கு அபராதம் ரூ. 2,000 முதல் ரூ. 10,000 வரையிலும் மற்றும் சிறைத் தண்டனை 1 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரையும் வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் முருகேசன், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் (பொ)ஹேமா, மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஜாஸ்மின், மாவட்ட நுகா்வோா் பாதுகாப்புக் குழு சங்க உறுப்பினா் விஜயராஜ், வட்ட வழங்கல் அலுவலா் கௌரிசங்கா், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

