தொடா் மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
வாணியம்பாடி: கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை முதல் வாணியம்பாடி அடுத்த ஆந்திர எல்லைப்பகுதியான புல்லூா் கனகநாச்சியம்மன் கோயில் அருகில் பாலாற்றில் தடுப்பணை நிரம்பி வெள்ளம் அதிகரித்து தமிழக பகுதியில் பாய்ந்து வருகிறது.
இதனால் ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூா், கொடையாஞ்சி, மேட்டுப்பாளையம் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு ஊராட்சி நிா்வாகத்தினா் மற்றும் வருவாய்த் துறையினா் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாறு மேம்பாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை திரளான சிறுவா்கள், இளைஞா்கள், பொது மக்கள் வேடிக்கை பாா்த்து சென்றனா்.
