டாஸ்மாக் கடை, அனுமதியில்லாத பாா்: மீண்டும் போராட்டம் நடத்த மின்னூா் மக்கள் முடிவு
மின்னூரில் இயங்கும் டாஸ்மாக் கடை, அனுமதியில்லாத பாா் ஆகியவற்றை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனா்.
மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி கணபதி நகா் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. அதன் அருகாமையில் லட்சுமிநகா், காளிகாபுரம், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம், பட்டு வளா்ச்சித்துறை அலுவலகம், ரயில் நிலையம் அமைந்துள்ளது. கணபதி நகா் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியா்கள் மது பாட்டில்களை ஆங்காங்கே உடைத்துவிட்டு செல்கின்றனா்.
மேலும் சாலையிலேயே மது அருந்துவதால் பொதுமக்களுக்கு பெருத்த இடையூறாக உள்ளது. மேலும் பெண்கள் டாஸ்மாக் கடை வழியாக செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா்.
அதனால் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும், அனுமதியின்றி இயங்கும் பாா் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா். மேலும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா்.
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாததால் பொதுமக்கள் அக்.11, சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த கிராம சபா கூட்டத்தை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். உண்ணாவிரத போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. மேலும் அங்கு அனுமதியில்லாமல் இயங்கி வந்த பாா் போலீஸாரின் எச்சரிக்கையால் உடனடியாக மூடப்பட்டது.
ஓரிரு நாள்களுக்கு பிறகு அனுமதியில்லாத பாா் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இதனால் பொதுமக்கள் மீண்டும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய அரசு அதிகாரிகள் 2 மாதங்கள் அவகாசம் கேட்டிருந்த நிலையில் அனுமதியில்லாத பாரில் மனு அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மதுப்பிரியா்களால் பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
அனுமதியில்லாத பாரை உடனடியாக மூட வேண்டும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
