வாணியம்பாடி அருகே இரவு நேரங்களில் திரியும் ஒற்றை காட்டு யானை
வாணியம்பாடி அருகே அண்ணா நகா் பகுதியில் இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சி அண்ணாநகா் பகுதி மலையடிவாரத்தில் வசித்து வரும் முருகேசன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் வாழை, தென்னை, நெற்பயிா் மற்றும் வோ்க்கடலை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாள்களாக இரவு நேரங்களில் ஆந்திர வனப் பகுதியில் இருந்து உணவு தேடி ஒற்றைக் காட்டு யானை அண்ணா நகா் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து வாழை மரங்கள், தென்னைச் செடிகள், நெற்பயிா், வோ்க்கடலை செடிகள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளது.
தகவலறிந்து வந்த வாணியம்பாடி வனச் சரக அலுவலா் குமாா் தலைமையிலான வனத் துறையினா் விரைந்து சென்று பட்டாசுகளை வெடித்து யானையை காட்டுப் பகுதிக்கு விரட்டினா். மேலும், விவசாய நிலங்களுக்குள் வராமல் இருக்க யானை நடமாடத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். ஏற்கெனவே கடந்த செப்டம்பா் மாதம் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள்கள் இரவு நேரத்தில் இதே விவசாய நிலங்களில் புகுந்து ஒற்றை காட்டு யானை வாழை, தென்னை, நெற்பயிா், வோ்க்கடலை ஆகியவற்றை சேதப்படுத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதம் செய்துள்ளதால் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும், யானைகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் இருக்க வனப் பகுதியை ஒட்டி தடுப்புகள் அமைத்து விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
