திருவள்ளூர் அருகே மாநகர பஸ் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பஸ்ஸின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பேரம்பாக்கத்துக்கு மாநகர பஸ் (தடம் எண் 591) இயக்கப்படுகிறது. திருவள்ளூரை அடுத்த மணவூரைச் சேர்ந்த முனுசாமி என்பவர் பஸ் டிரைவராக உள்ளார். நடத்துநராக தினகரன் (39) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் பேரம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு அந்த பஸ் புறப்பட்டுச் சென்றது. கூவம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஆனால் அவர் யார் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து மப்பேடு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த சிலர், ஆத்திரத்தில் பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்ததும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடினர். பின்னர் போலீஸார் மூதாட்டியின் சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ்ûஸ மப்பேடு காவல்நிலையத்துக்கு டிரைவருடன் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.