மாவட்டத்தில் உள்ள பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் தாட்கோ சார்பில் பழங்குடியினருக்கு நில மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு சுழல் நிதி திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்கு தகுதியுள்ள பழங்குடியினர் இனத்தவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிலம் மேம்பாட்டுத் திட்டம்: பழங்குடியினராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பு 18- 55-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர், விவசாயம் தோட்டப் பயிர், மலர் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர், அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை அரசு மானியம் பெறாதவராக இருக்க வேண்டும்.
பாசன வசதி உள்ள நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
நிலம் மேம்பாடு செய்வதற்கு அந்தந்த மாவட்டங்களில் நபார்டு வழி காட்டுதலின்படி கிணறுத் தோண்டுதல், ஆழ்துளைக் கிணறுத் தோண்டுதல், மின் மோட்டார் அமைத்தல், மின் இணைப்புப் பெறுதல் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
(பயனாளி மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் நிலம் வைத்திருக்கலாம்) ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு விண்ணப்பதாரரின் நிலத்தில் போதிய நீர் ஆதாரம் உள்ளது என்பதற்கான புவியியல் வல்லுநரின் சான்று பெறப்பட வேண்டும்.
தொழில் முனைவோர் திட்டம்: விண்ணப்பதாரர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் கூட்டாண்மை நிறுவனமாகவும் இருக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு 18-55-க்குள் இருக்க வேண்டும். கடன், மானியம் கோரும் தொழிலில் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர், அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை அரசு மானியம் பெறாதவராக இருத்தல் வேண்டும்.
தொடங்கவுள்ள தொழிலை விண்ணப்பதாரரே தெரிவு செய்து கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன், மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில் புரிய வேண்டும். வாகனத்துக்கு விண்ணப்பிப்பவர் ஓட்டுநர் உரிமம், பேஜ்ட் மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம்: விண்ணப்பதாரர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வயது 18-ல் இருந்து 35-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மானியம் கோரும் தொழிலில் (வாகனம் ஓட்டுதல் பயிற்சி) முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இவர் மாவட்டத்திலேயே வசிக்க வேண்டும்.
இதில், பயணியர் வாகனம் ஜீப்பு, ரூ.8 லட்சம் வரை, கனரக வாகனம் ரூ.11 லட்சம் ஆகியவற்றை வாங்க உத்தேசித்துள்ளவர்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு வாகனங்களில் ஒன்றை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தின்கீழ் வாங்கப்படும் வாகனம் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன், மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில் புரிய வேண்டும்.
சுமை ஊர்தி, கனரக வாகனம் வாங்குவோர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ள விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்.
ஜீப்பு வாங்குவோர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தொடர்புடைய சுற்றுலா அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கான சுழல் நிதி: பழங்குடியின மகளிர் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.
குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். வேறு எந்த அரசுத் திட்டத்திலும் சுழல்நிதி, பொருளாதார கடனுக்கான மானியம் பெற்றிருக்கக் கூடாது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி: பழங்குடியின மகளிர் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.
குழு உறுப்பினர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். குழு, இரண்டு முறை தரம் பிரித்தல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறு எந்த அரசு திட்டத்திலும் சுழல்நிதி, பொருளாதாரக் கடனுக்கான மானியம் பெற்றிருக்கக் கூடாது.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவர்கள் ட்ற்ற்ல்:றறச்ஹள்ற்.ற்ஹட்க்ஸ்ரீர்.ஸ்ரீர்ம் என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும்போது குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, ஜாதி சான்று, வருமானச் சான்று, கல்வித் தகுதி, வயதுக்கான ஆதார சான்று (பள்ளி மாற்றுச் சான்று), வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, இவற்றில் ஏதாவது ஒன்றையும், டின் நம்பர் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்டஅறிக்கை, புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடைய மேற்குறிப்பிட்ட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.