கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர், அவரது தானியங்கி கலப்பு மின்சார அமைப்புக்காக மாநில அளவிலான புத்தாக்க ஆய்வு விருதை வென்றுள்ளார்.
திருச்சியில் உள்ள சிவானி பொறியியல், அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான தமிழக அரசின் புத்தாக்க ஆய்வு விருதுக்கான போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் தமிழகம் முழுக்க 668 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களது படைப்புகளை காட்சிக்காக வைத்தனர்.
இதில் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவரான என்.சி.பவன்குமார் கலந்து கொண்டு அவரது படைப்பான தானியங்கி கலப்பு மின்சார அமைப்பை வைத்திருந்தார்.
இந்த அமைப்பானது மின் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கை ஆற்றல் மூலங்களான சூரிய சக்தி, காற்று சக்தி கொண்டு இந்த அமைப்பு இயங்கும்.
மின் தடை இருக்கும்போது சூரிய சக்தி கிடைத்தால் அதைக் கொண்டும், காற்று சக்தி இருந்தால் அதைக் கொண்டும் மின்சாரத்தைப் பெறக் கூடிய வகையில் இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்த வடிவமைப்புக்கு மாநில அரசின் புத்தாக்க ஆய்வு விருது கிடைத்துள்ளது.
விழாவில், தமிழக கதர், கைத்தறித் துறை அமைச்சர் பூனாட்சி, சட்டப்பேரவை கொறடா மனோகர், அரியலூர் மக்களவை உறுப்பினர் ரத்தினவேல், உயர்கல்வித் துறை துணைச் செயலாளர் கோபால், சிவானி கல்விக் குழுமத் தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப இயக்குநர் அய்யம் பெருமாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ôணவர் என்.சி.பவன்குமாருக்கு புத்தாக்க ஆய்வு விருதுக்கான தங்கப் பதக்கத்தை வழங்கினர்.
விருது பெற்ற மாணவரைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஈஸ்வரய்யா, உதவித் தலைமை ஆசிரியர் சண்முகம், ஊராட்சி மன்றத் தலைவர் நாகபூஷணம் முனுசாமி உள்ளிட்டோர் பாராட்டினர்.
மேலும் மாணவர் பவன்குமார் புதுதில்லியில் அக்டோபர் 6 முதல் 8-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான மாணவர்களுக்கிடையேயான புத்தாக்க ஆய்வுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.