ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சாலையில் சுற்றித் திரிந்த 14 மாடுகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சமீபகாலமாக சாலைகளில் அதிகளவில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளை கருத்தில் கொண்டும், இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கைகளை வைத்தனர். அதன் பேரில், கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில், சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அபராதம் செலுத்தினால், மூன்றாவதாக பிடிக்கப்படும் மாடுகளை கோ சாலைகளுக்கு அனுப்புவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், துப்புரவு மேற்பார்வையாளர் இளங்கோவன் தலைமையிலான ஊழியர்கள், பஜார், முக்கியச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 14 மாடுகளைப் பிடித்து, பேரூராட்சி பின்புறம் உள்ள காலி இடத்தில் கட்டி வைத்தனர்.
ஒரு மாட்டுக்கு ரூ.500 வீதம் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் மட்டும் தலா ரூ.500 கட்டி மாடுகளை மீட்டனர்.