பொன்னேரி ரயில் நிலையச் சாலையில் உள்ள குடிசை வீடுகளை அகற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், பொன்னேரி பேரூராட்சி எல்லைக்குள் தங்களுக்கு மாற்று இடம் அளித்து விட்டு வீடுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி ரயில் நிலையச் சாலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை ஒட்டியுள்ள சுவர், சாலை நெடுகிலும் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30-ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு காரணமாக பொன்னேரி ரயில் நிலையச் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடிசை வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பொன்னேரி ரயில் நிலையச் சாலையோரத்தில் உள்ள வீடுகளை அகற்ற வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி பொன்னேரி கோட்டாட்சியர் மேனுவல்ராஜ், வட்டாட்சியர் முரளி ஆகியோர் ரயில் நிலையச் சாலையில் இருக்கும் குடிசை வீடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அகற்றப்படும் வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு பொன்னேரி - பழவேற்காடு சாலையில் உள்ள வஞ்சிவாக்கம் பகுதியில் மாற்று இடத்தை வருவாய்த் துறையினர் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நகரப் பகுதியில் வாழ்ந்த தங்களுக்கு 8 கி.மீ. தூரமுள்ள வஞ்சிவாக்கம் பகுதியில் மாற்று இடம் அளித்தால் பிள்ளைகளின் படிப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தற்போது அகற்றப்படும் இடத்துக்கு அருகில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் மாற்று இடம் அளிக்க ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.