சுடச்சுட

  

  தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழிக்க லோக் சத்தா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் லட்சியப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் திங்கள்கிழமை முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

  லஞ்சத்தை ஒழிக்கவும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நாட்டு மக்களிடையே பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னையைச் சேர்ந்த லோக் சத்தா கட்சியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் தமிழகம் முழுவதும் 5 மாத சுற்றுச் பயணமாக பைக்கில் புறப்பட்டுள்ளனர்.

  இவர்களுடைய விழிப்புணர்வு பேரணியை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பாடம் நாராயணன் என்ற சமூக ஆர்வலர் தொடங்கி வைத்தார். திங்கள்கிழமை திருவள்ளூர் பஸ் நிலையத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பிரசாரம் மேற்கொண்டிருந்த அக்கட்சியின் மாநில தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் மாநில இளைஞர் அணிச் செயலாளரான ஜெய்கணேஷ் ஆகியோரிடம் பேசியபோது, ஜெகதீஸ்வரன் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்ததாகவும், 3 வருடம் அமெரிக்காவிலும் பணிபுரிந்த அனுபவமும் உள்ளதாகவும் கூறினார். ஜெய்கணேஷ், சென்னை துரைப்பாக்கத்தில் மருந்து கடை நடத்தி வந்துள்ளார்.

  தங்களின் லட்சிய பயணம் குறித்து அவர்கள் கூறியது: தமிழக மக்களிடையே லஞ்சத்தை ஒழிப்பதன் அவசியம் குறித்தும், சேவை பெறும் உரிமை சட்டம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பயணத்தை தொடங்கியுள்ளோம்.

   நாங்கள் இருவரும் எங்களின் தொழிலை விட்டுவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் லட்சியப் பயணத்தை தொடங்கியுள்ளோம். ஒரு மாவட்டத்தில் 3 முதல் 4 நாள்கள் வரை என கணக்கிட்டு 4 கட்டமாக எங்களது பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.  லஞ்சத்தால் ஏற்படும் தீமைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் சேவை பெறும் உரிமைச் சட்டம் குறித்து பல கிராம மக்களுக்குத் தெரியாது. உதாரணமாக ரேஷன் கார்டு விண்ணப்பித்த 60 நாள்களில் வழங்க வேண்டும் என்ற காலக் கெடு உள்ளது.

  அந்த காலத்துக்குள் ரேஷன் கார்டுகளை வழங்காமல் அலைகழிக்கப்பட்டால்,  சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரது மாத ஊதியத்தில் இருந்து ஒரு தொகையை அபராதமாகவும், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடாகவும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

  இந்த நடைமுறை தற்போது கர்நாடகா, கேரளா, அஸ்ஸாம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்படுகிறது.

  தமிழகத்திலும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்து வருகிறோம். 

  திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாள்கள் முகாமிட்டு பஸ் நிலையம், ரயில் நிலையம், பஜார் வீதி, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பிரசாரம் மேற்கொள்வோம்.

  பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் அடுத்தடுத்த மாவட்டங்களில் எங்களது பிரசாரத்தை தொடர்வோம் என்றனர்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai