Enable Javscript for better performance
செய்வீர்களா...? செய்வீர்களா...? : முதல்வரை போல மு.க.ஸ்டாலின் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

  

  செய்வீர்களா...? செய்வீர்களா...? : முதல்வரை போல மு.க.ஸ்டாலின் பிரசாரம்

  Published on : 27th March 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் தி.மு.க. கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான துரை. ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது பிரசாரத்தின்போது தொண்டர்களை பார்த்து கேட்பது போலவே "செய்வீர்களா...? செய்வீர்களா...?' என்று பிரசாரம் செய்தார்.

  பெரியபாளையத்தில் நடைபெற்ற மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு ஒன்றியச் செயலர் ஜே.மூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணியில் பேரூராட்சித் தலைவர் ஜி.பி.வெங்கடேசன், நகரச் செயலர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வேணு, தி.மு.க. நிர்வாகிகள் டி.ஜெ.கோவிந்தராஜன், பி.வெங்கடாசலபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  மேலும் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பாலாஜி, ஜெமினி, ரவிஎடிசன், பூவை மூர்த்தியார் மக்கள் பேரவை நிர்வாகி சு.ஜான் தியாப்லஸ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  மேற்கண்ட மூன்று பகுதியிலும் பேசிய மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி சுட்டிக் காட்டும் நபரே அடுத்த பிரதமர் என்ற நிலையை உருவாக்கும் வகையில் தி.மு.க. பிரசாரங்களின்போது மக்கள் எழுச்சியை காண முடிகிறது.

  தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போல தேர்தலின்போது மட்டும் மக்களை தேடி வருபவர் கருணாநிதி அல்ல. அதுவும் தமிழக முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து வந்து மக்களை சந்திக்கிறார்.

  ஆனால் சாலை வழியாக அவர் பயணித்து மக்களை சந்தித்தால் தெரியும் அவரது ஆட்சியில் சாலைகளின் நிலைமை.

  தமிழக முதல்வர் அவரது பிரசாரக் கூட்டங்களில் கேட்பது போல நானும் கேட்கிறேன், தமிழகத்தில் நடைபெறும் மோசமான ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா...? என்றார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் "செய்வோம்' என்று கத்தினர்.

  நான் ஆட்சிக்கு வந்தால் தடையற்ற மின்தடை வரும் என்று சொல்லி ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்குமேல் மின்தடையை செய்யும் அ.தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா...? என்று மீண்டும் ஸ்டாலின் கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் செய்வோம் என்று கத்தினர்.

  ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா?, வெற்றி பெற செய்வீர்களா? என மீண்டும் மீண்டும் மு.க.ஸ்டாலின் கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் "செய்வோம், செய்வோம்' என்று கூறினர்.

  திருத்தணியில்...

  அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோவை ஆதரித்து திருத்தணி- அரக்கோணம் சாலை சந்திப்பு அருகில் மு.க. ஸ்டாலின் பேசினார்.

  அவர் மேலும் பேசியது: கடந்த, 2006-11-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் திருத்தணியில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், ரத்த வங்கி, அறுவை சிகிச்சை மையம், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் போன்ற அலுவலகங்கள் கட்டப்பட்டன.

  திருத்தணி பொதட்டூர்பேட்டை சாலையை 50 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது என்றார் அவர்.

  மாவட்டச் செயலர் காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கன்னையன், திருத்தணி நகரச் செயலர் எஸ்.சந்திரன், மாவட்டப் பிரதிநிதி எம்.பூபதி, முன்னாள் முருகன் கோயில் அறங்காவலர் உறுப்பினர் மு.நாகன் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  பொன்னேரியில்...

  இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

  அக் கூட்டத்தில், திமுக பொருளர் மு.க ஸ்டாலின் பேசியது: எந்த சூழ்நிலையிலும் மக்களோடு இணைந்திருப்பது திமுக இயக்கம். திமுக ஆட்சியில் 2 மணி நேரம் இருந்த மின்வெட்டு தற்போது 10 முதல் 16 மணி நேரமாக மாறியுள்ளது.

  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, மேலூர் கூட்டு குடிநீர் திட்டம், பழவேற்காட்டில் சுனாமி திட்டத்தில் 1190 கான்கிரீட் வீடுகள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம், பழவேற்காடு பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்குள்ள ஏரியில் மேம்பாலம் அமைத்தது உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் கடந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என பேசினார்.

  ஊத்துக்கோட்டையில்...

  திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து ஊத்துக்கோட்டையில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

  அப்போது அவர் பேசியதாவது: பஸ் கட்டணம், பால் விலை உயர்வு மற்றும் அத்தியவசியப் பொருள்களின் விலையும் விண்ணைமுட்டும் வகையில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்காமல் பல சாதனைகளை செய்துள்ளதாக ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார் என்றார் ஸ்டாலின்.

  நிகழ்ச்சியில், எல்லாபுரம் ஒன்றியச் செயலர் மூர்த்தி, நகர இளைஞர் அணிச் செயலர் அப்துல் ரசித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai