Enable Javscript for better performance
ஆவடி நகராட்சியை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆவடி நகராட்சியை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

    By அம்பத்தூர்,  |   Published on : 04th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, ஆவடி நகராட்சி அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

    சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள திருமுல்லைவாயல் சி.டி.எச். சாலையில் காவல் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான காலியான இடம் உள்ளது. ஒரு ஏக்கர் 20 சென்ட் பரப்பளவு உள்ள இந்த இடத்தில் நீண்டகாலமாக நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.

    இவர்களை காலி செய்வதற்கு, இடத்தின் உரிமையாளர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

    எதுவும் பலன் அளிக்காதாததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி ஆனது.

    இதையடுத்து இடத்தின் உரிமையாளர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதனிடையே இங்கு வசிக்கும் நரிக்குறவர்கள் அடிப்படை வசதி கேட்டு ஆவடி நகராட்சியில் போராடி வருகின்றனர்.

    இடம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகத்தால் எதுவும் செய்து தர முடியவில்லை என்று ஆவடி நகராட்சி கூறியுள்ளது.

    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திருமுல்லைவாயல் நரிக்குறவர் சங்கத்தின் தலைவி தனலட்சுமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வீட்டின் முன்பு கூடி, தாங்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனுக் கொடுத்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, புதன்கிழமை காலை 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் ஆவடி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

    ஆவடி நகராட்சி 33-ஆவது வார்டுக்கான இடைத்தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு, முக்கிய பிரமுகர்களுடன் வருவதாக இருந்தது.

    முற்றுகைப் போராட்டம் நடைபெற்றதால் நகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் செய்வதறியாது திகைத்தனர்.

    முதல்கட்டமாக ஆவடி காவல் உதவி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

    "நகராட்சி அதிகாரிகள் வராமல் முற்றுகைப் போராட்டத்தை கைவிடமாட்டோம்' என நரிக்குறவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

    இதையடுத்து ஆவடி நகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியம், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் 24-ஆம் தேதி நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறியது: "வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது. அங்கு சாலை வசதி செய்ய முடியாது. குடிநீர் மட்டும் லாரி மூலம் வழங்க உள்ளோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai