சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பாளர்களின் வசமுள்ள ஏரி மீட்கப்படுமா?எஸ்.முகம்மது கவுஸ்

    By திருவள்ளூர்  |   Published on : 06th September 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியை ஆக்கிமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கவும், சேதப்படுத்தப்பட்ட அதன் கரையை மழைக்காலம் வருவதற்குள் சீரமைக்கவும் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் - தலக்காஞ்சேரி சாலையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது.

    150- ஏக்கருக்கும் மேல் பரப்பளவு உள்ள ஏரியை நம்பி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டு வந்தது.

    நாளடைவில் கோடை வெப்பத்தால் ஏரி வறண்டதை தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள், அங்கு நெற்பயிரிட்டு ஏரியை ஆக்கிரமிப்பு செய்தனர்.

    மேலும், அறுவடை செய்யும் நெல்லை எடுத்துச்செல்ல ஏரியின் கரைகளை பல இடங்களில் உடைத்து விட்டுள்ளனர்.

    இதனால், ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஏரிப் பாசனத்தை நம்பி பயிரிட்டு வந்த விவசாயிகள் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    ஏரியின் மறுபக்கம் தேசிய ஊரக வேலை: ஏரியின் பகுதியில் பெருமளவு ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டுள்ள நிலையிலும், கரைகளை உடைத்துள்ள நிலையிலும் அதனை கவனிக்காமல், ஏரியின் மறுபக்கத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரியை ஆழப்படுத்தும் பணியும் பெயரளவில் நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக, அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    தற்போது பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு காலியாக உள்ள நிலத்தை உடனடியாக மழைக்காலம் வருவதற்குள் பொதுப்பணித் துறையினர் மீட்டு, அதை உரிய முறையில் ஆழப்படுத்தி, கரைகளையும் பலப்படுத்தி பாசனப் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது:

    இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து எங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் ஆய்வு செய்தோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும், அறுவடைக்குப் பின்னர் ஏரியை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தனர்.

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி குறித்து ஒன்றிய நிர்வாகத்தினர் கூறுகையில், ஏரியில் மேடான பகுதியில் நீர் தேக்கி வைக்கும்விதமாக ஆழப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆக்கிரமிப்புகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai