சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டியில் இளைஞரைக் கொலை செய்து புதைத்ததது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தக் கொலை, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  சென்னை மாதவரத்தைச் சேர்ந்த நண்பர்கள் வேலு (36), ரவி, நாகூர். இவர்கள் அப்பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

  இவர்களுக்கு கும்மிடிப்பூண்டி சாய்பாபா நகரைச் சேர்ந்த தினகர் (23), ஜெய்காந்த் (20) ஆகியோருடனும் பழக்கம் இருந்தது.

  இந்நிலையில், நாகூரின் சகோதரியுடன் வேலு நெருங்கி பழகி வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த நாகூர், ரவியுடன் சேர்ந்து வேலுவை கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

  அதன்படி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, ரவியின் வீட்டில் வைத்து வேலுவை அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்தனராம். அப்போது, அங்கு வந்த தினகர், ஜெய்காந்த் ஆகியோர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என தினகரையும், ஜெய்காந்தையும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, வேலுவின் உடலை ரவியின் வீட்டுக்கு முன்பு உள்ள காலியிடத்தில் அவர்கள் புதைத்ததாக தெரிகிறது.

  இருபது நாள்களுக்கு பிறகு தினகர், ஜெய்காந்தை கைப்பேசியில் ரவி தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

  அப்போது, தனது வீட்டில் வேறு நபர்கள் குடியிருக்க வருவதாகவும், அவர்களுக்கு இந்த விஷயம் தெரிவதற்குள்ளாக வேறு இடத்தில் வேலுவின் உடலை புதைத்துவிடும்படி கூறினாராம்.

  அதன்படி, வேலுவின் உடலை அவர்கள் தோண்டியெடுத்து பட்டுப்புளியில் உள்ள தைலம்தோப்பில் புதைத்தனர்.

  இந்நிலையில், இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை கும்மிடிப்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்ரியிடம் நடந்த விவரங்களை கூறி, சரணடைய விரும்புவதாக தெரிவித்தனர்.

  கிராம நிர்வாக அலுவலரின் புகாரின்பேரில் தினகர், ஜெய்காந்தை கும்மிடிப்பூண்டி போலீஸார் கைது செய்தனர்.

  இதனைத்தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் சேகர் தலைமையில், பொன்னேரி வட்டாட்சியர் முரளி முன்னிலையில் தைலம் தோப்பில் புதைக்கப்பட்ட வேலுவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது.

  முன்னதாக புதைக்கப்பட்ட இடத்திலிருந்தும் அவரது உடலின் சில பாகங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலுசாமி முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டன.

  இந்தக் கொலைச் சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நாகூர், ரவி ஆகியோரை தேடி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai