சுடச்சுட

    

    வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகம்

    By திருவள்ளூர்  |   Published on : 08th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே உள்ள ஊராட்சியில் கட்டடம் கட்ட இடம் வழங்கப்பட்டும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், வட்ட நிர்வாகம் பட்டா வழங்காததால் நெருக்கடியான இடத்தில் வாடகைக் கட்டடத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது.

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்குள்பட்டது பேரம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் வாடகைக் கட்டடத்தில் கடும் இட நெருக்கடியான இடத்தில் அந்தப் பகுதி சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த அலுவலகத்தில் பேரம்பாக்கம், கடம்பத்தூர், செஞ்சி, ஏகாட்டூர், கூவம், கொண்டஞ்சேரி, இருளஞ்சேரி, மப்பேடு, நரசிங்கபுரம், சிற்றம்பாக்கம், பாகசாலை, சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த 45 கிராமங்களின் நிலங்கள், வீடுகள் உள்ளிட்டவை விற்பதற்கும், வாங்குவதற்கும் பதிவு செய்ய வேண்டும்.

    இந்த நிலையில் அந்த சார்-பதிவாளர் அலுவலகம் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், கடுமையான இட நெருக்கடியாகவும் உள்ளதால் அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் முதல் பத்திரப் பதிவு செய்யும் பொதுமக்கள் வரை அவதிப்படுகின்றனர்.

    மேலும் அந்தப் பகுதியில் பாதுகாப்புக் குறைபாடும் உள்ளதால் பணத்தைக் கொண்டு வரவும், கொண்டுச் செல்லவும் நில உரிமையாளர்கள் அச்சம் கொள்கின்றனர்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கேமரா, கணினியை திருடிச் சென்றனர்.

    இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதுபோல் பல்வேறு இன்னல்களைத் தடுக்க நில உரிமையாளர்கள், பேரம்பாக்கம் பகுதி பொதுமக்கள், புதிய விசாலமான பத்திரப் பதிவு அலுவலகம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்ததை அடுத்து பேரம்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் 20 சென்ட் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றி திரெüபதி அம்மன் கோயில் அருகில் இடத்தை ஒதுக்கீடு செய்தனர்.

    பத்திரப் பதிவுத் துறை சார்பில் கட்டடம் கட்ட ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிதியும் தயார் நிலையில் உள்ளது.

    ஆனால் இதுவரை கட்டடம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறவில்லை.

    இதுகுறித்து பேரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் துரையிடம் கேட்டபோது:

    சார் பதிவாளர் அலுவலகம் கட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று 20 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டடம் கட்டுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய ஊராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது.

    ஆனால் அந்த இடத்துக்கு வட்டாட்சியர் பட்டா வழங்காததால் இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. பட்டா கிடைத்தவுடன் உடனடியாக பணிகள் தொடங்கும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai