சுடச்சுட

    

    அரசு வழங்கிய நிலத்தில் முறைகேடு: கிராம மக்கள் போராட்டம்

    By DN  |   Published on : 10th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே ஆதிதிராவட மக்களுக்காக அரசு தரப்பில் வழங்கப்பட்ட இடத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

    திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சியில் கடந்த 2002-ஆம் ஆண்டு வாசீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அரசு தரப்பில் இருந்து வாங்கி ஆதிதிராவிட ஏழை குடும்பத்தினர் 135 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து, கடந்த 2008-ஆம் ஆண்டு அதே இடத்தில் மீதமுள்ள பகுதியில் 20 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

    பின்னர், கடந்த 2011-ஆம் ஆண்டில் மீதமிருந்த இடத்தில் 14 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இதே ஊராட்சியில் உள்ள காலனியில் மேலும் 60 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருவதாகவும் அவர்களுக்கும் அந்த இடத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரி காலனி மக்கள் திருவள்ளூர் - பேரம்பாக்கம் சாலையில் செவ்வாய்க்கிழமை காலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    இதுகுறித்து ஏற்கெனவே தகவலறிந்த தாலுகா போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    இருப்பினும், மக்கள் கலைந்துச் செல்லாமல் பிரச்னைக்குரிய இடத்தில் நின்று வருவாய்த் துறையினர் வரவேண்டும் என போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் தனி வட்டாட்சியர் ராஜகோபால் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த இடம் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது. ஆகையால், மீதமுள்ளவர்களுக்கு பட்டரைபெரும்புதூரில் பட்டா வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் என வட்டாட்சியர் கூறினார்.

    ஆனால், இப்பகுதியில் 170 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை இந்த பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களின் உதவியோடு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெயரில் 2 பட்டாக்கள், 3 பட்டாக்கள் என பெயர்களை மாற்றி வழங்கப்பட்டுள்ளன. அந்த முறைக்கேட்டை விசாரித்து, உரிய தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் ராஜகோபால் உறுதியளித்ததன் பேரில், மக்கள் கலைந்துச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai