Enable Javscript for better performance
விவசாயிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடிக் கிடக்கும் உழவர் சந்தை- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடிக் கிடக்கும் உழவர் சந்தை

    By DN  |   Published on : 10th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூரில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உழவர் சந்தை, விவசாயிகளின் வருகை இல்லாததால் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

    இந்த நிலையில் உழவர் சந்தை வாயிலில் சாலையோரம் நீண்ட வரிசையில் பூ வியாபாரிகள் வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    திருவள்ளூர் ஜே.என்.சாலையில் சார்பு நீதிமன்றம் அருகே உழவர் சந்தை அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த உழவர் சந்தையில் திருவள்ளூர், கடம்பத்தூர், மோவூர், பூண்டி, அரண்வாயல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தோட்டப் பயிரிடும் விவசாயிகள் தங்களது விளைப்பொருளை உழவர் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர்.

    இந்த உழவர் சந்தையில், பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே தங்களது விளைப் பொருளை விற்பனை செய்ய முடியும்.

    ஆரம்பத்தில், இந்த உழவர் சந்தைக்கு விவசாயிகள், மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது.

    ஆனால், நாளடைவில் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளின் வருகை குறைந்து, திருவள்ளூர் பஜார் வீதி, சுற்றியுள்ள பகுதியில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட், வணிக வளாகம் போன்ற இடங்களில் விவசாயிகள் தங்கள் விளைப் பொருளை விற்பனை செய்கின்றனர். இதனால், இந்த உழவர் சந்தை வெறச்சோடிக் காணப்படுகிறது. இதனிடையே, பூ விவசாயிகள் சிலர் உழவர் சந்தைக்கு வந்து தங்களது விளைப் பொருள்களை விற்றனர். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

    இந்நிலையில், விவசாயிகள் தவிர, அடையாள அட்டை இல்லாத பூ வியாபாரிகளும் உழவர் சந்தையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யத் தொடங்கினர். இதனால் உழவர் சந்தை பூ சந்தையாக மாறியது.

    ஆக்கிரமிப்பு வியாபாரிகளின் அத்துமீறல் அதிகரித்திருப்பது குறித்து உழவர் சந்தையைப் பராமரிக்கும் அலுவலர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவின்பேரில், உழவர் சந்தையை ஆக்கிரமித்திருந்த அடையாள அட்டை இல்லாத வியாபாரிகளை போலீஸார் உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றினர். இதனைத்தொடர்ந்து, அந்த வியாபாரிகள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்தனர்.

    இதனால் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை, விழாக் காலங்களில் பூக்களை வாங்க மக்கள் ஜே.என்.சாலையில் குவியும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த சாலையோர வியாபாரிகள் இடையூறு ஏற்படுத்துவதால்தானஅ உழவர் சந்தையில் விவசாயிகளின் வருகை குறைந்துள்ளதாக உழவர் சந்தையை பராமரிக்கும் அலுவலர்கள் கூறுகின்றனர்.

    எனவே, விவசாயிகளின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசல், விபத்துகளைக் குறைக்கும் வகையிலும்  மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இணைந்து இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai