சுடச்சுட

    

    கிராமங்களில் காண முடியாத தலையாரிகள்: மக்களின் அடிப்படைத் தேவைகளில் சுணக்கம்

    By திருவள்ளூர்  |   Published on : 15th September 2014 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கு தலையாரிகள் வருவதே இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதனால், மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைக்கப்பெறுவதில் சுணக்கம் ஏற்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட 10 வட்டங்களில் 526 வருவாய் கிராமங்கள் உள்ளன.

    ஒவ்வொரு வருவாய் கிராமத்துக்கும் ஒரு தலையாரி நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த கிராமங்களில் நடக்கும் நல்லது, கெட்டது, கிராம மக்களின் சொத்துக் கணக்குகள், யார் வாரிசுதாரர், மக்கள்தொகை, பிறப்பு, இறப்பு உள்ளிட்ட தகவல்களை விரல் நுனியில் தகவல்களை வைத்து, உயர் அதிகாரிகளுக்கு தேவைப்படும்போது தெரிவிப்பது கடமை.

    அதனால்தான், "ஒளியத்தெரியாதவன் தலையாரி வீட்டுக்குள் ஒளிந்த கதைபோல்' என அந்த காலத்தில் ஒரு சொலவடை உண்டு. அந்த அளவுக்கு தலையாரிகள் அரசுக்கு விசுவாசமாக பணியாற்றி வந்தனர்.

    முன்பு பணியாற்றிய தலையாரிகள், கிராமத்திலேயே தங்கியிருந்து வீட்டு வரி, இருசால் வரிகளை வசூல் செய்து, 3 மாத காலத்துக்குள் முடித்துவைப்பது வழக்கம்.

    இதுதவிர, விபத்து, தற்கொலை செய்துகொண்டவர்களின் விவரங்களை சேகரித்து, உயரதிகாரிகள் வந்து பார்வையிடும்வரை, பாதுகாப்புக் கருதி விடிய விடிய காத்திருப்பர்.

    ஒரு கிராமத்துக்குள் போலீஸார் செல்ல வேண்டும் எனில், சம்பந்தப்பட்ட தலையாரிக்கு தகவல் தெரிவித்து, குற்ற நடவடிக்கைகளை கேட்டறிந்து, அதற்கு பின்னரே நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

    இந்நிலையில், தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களின் பக்கமே தலையாரிகள் வருவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    மக்களின் அடிப்படைத் தேவைகளான வாரிசு சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் போன்றவற்றைப் பெற தலையாரின் உதவிகள் தேவை.

    ஆனால், பெரும்பாலான கிராமங்களில் தலையாரிகளை தற்போது பார்க்கவே முடிவதில்லை. எந்த நோக்கத்துக்காக இவர்கள் நியமிக்கப்பட்டார்களோ அந்த வேலையை தவிர, மற்ற பணிகளில் ஆர்வம் காட்டுவதாக மக்களிடையே புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து கிராம மக்கள் சிலர் கூறியது: பெரும்பாலான தலையாரிகள், அவர்களது எல்லைக்கு உள்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்து பட்டா மாறுதல் பணி, சான்றிதழ் பெற வருபவர்களிடம் பேரம் என வருவாய் உள்ள பணிகளை செய்து வருகின்றனர் என்றனர்.

    எனவே, கிராம மக்களின் நலன்கருதி, அந்ததந்த பகுதி தலையாரிகள், சம்பந்தப்பட்ட கிராமத்தில் பணியில் இருக்கும் வகையில் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வட்ட நிர்வாகத்தினர் கூறுகையில், "இதுகுறித்து தங்களது கவனத்துக்கு எவ்வித புகாரும் வரவில்லை. இதுபோல் இருக்கும்பட்சத்தில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai