Enable Javscript for better performance
பெரியபாளையத்தில் சென்னையைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெரியபாளையத்தில் சென்னையைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை: 3 பேர் கைது

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 15th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் சென்னையைச் சேர்ந்த இளைஞரை அடித்துக் கொலை செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    சென்னை எர்ணாவூர், காசிமேடு கோயில் குப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் குமார் (28). மரத்தூள் வியாபாரி.

    இவர், தனது மனைவி தமிழ்செல்வி (25), மகன்கள் கிஷோர், ஹேம்நாத், உறவினர் ராஜா உள்ளிட்ட 8 பேருடன் பெரியபாளையம் பவானியம்மன் கோயிலுக்கு சனிக்கிழமை மாலை வந்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக குடிலை வாடகைக்கு எடுத்து அதில் அவர் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில், பெரியபாளையத்தில் உள்ள தண்டுமாநகரில் வெங்கடேஸ்வரா திரையரங்கம் அருகே அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் மேலாக டாஸ்மார் பார் இயங்குவது தெரிந்துகொண்டு, குமார், அவரது உறவினர் ராஜா உள்ளிட்ட மூன்று பேர் நள்ளிரவு 1.30 மணியளவில் அங்கு சென்றுள்ளனர்.

    அங்கு அவர்கள் மதுபாட்டில் கேட்டபோது, பாரில் இருந்தவர்கள் ரூ.150 கேட்டுள்ளனர். இது, அதன் உண்மையான விலையைவிட சற்று அதிகம் எனத் தெரிகிறது.

    அப்போது குமார், ரூ.140-க்கு தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, பாரில் இருந்த விற்பனையாளர் குமாரை திட்டிக்கொண்டே ரூ.140-க்கு மதுபாட்டிலைக் கொடுத்துள்ளனர். குமாரும், பதிலுக்கு அவரைத் திட்டியபடியே மதுபாட்டிலை வாங்கிவிட்டு, கடைக்கு எதிரிலேயே மது அருந்தத் தொடங்கினர்.

    இந்நிலையில், அங்கு வந்த 5 பேர், இங்கு மது அருந்தக்கூடாது எனக் கூறி, குமாரிடம் தகராறில் ஈடுபட்டனராம்.

    இதனைத்தொடர்ந்து அவர்கள், குமார், அவரது உறவினர்களை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த குமார், அங்கேயே சுருண்டு விழுந்தார். இதனைக் கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர், குமாரை அவரது உறவினர்கள் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

    தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் குமரவேல், பெரியபாளையம் காவல் ஆய்வாளர் சீனிபாபு, உதவி ஆய்வாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தண்டுமாநகரைச் சேர்ந்த வெற்றிவேலன் (19), கலைச்செல்வன் (19), தீபக் (19) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    விதிமுறை மீறல்: கோயில் நகரமான பெரியபாளையத்தில் விதிமுறைகளை மீறி சில பார்கள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களைவிட ரூ.50 வரை அதிக விலைக்கு இந்த பார்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அனுமதி நேரமான இரவு 10 மணிக்கும் மேலாக நள்ளிரவு வரை இந்த பார்கள் செயல்படுகின்றன. இதனால் அங்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

    பெரியபாளையத்தில் உள்ள 3 அரசு மதுபானப் கடை பார்களுக்கான அனுமதி, கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதியே முடிவடைந்த நிலையில், அரசு அனுமதியில்லாமல் மேற்கண்ட 3 பார்களும் செயல்பட்டு வருகின்றன.

    எனவே, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் மேலாகவும், அரசு அனுமதியின்றி செயல்பாடும் பார்களையும் தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai