சுடச்சுட

    

    புதிதாக வரும் புத்தகங்களை வைக்கவும், வாசகர்களுக்காக அலமாரியில் புதிய புத்தகங்களை அடுக்கவும் போதிய இடவசதி இன்றி திருவள்ளூர் மாவட்ட மைய நூலகம் திணறி வருகிறது.

    திருவள்ளூர் மாவட்ட மைய நூலகம் திருவள்ளூர் மோதிலால் தெருவில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆண்டு சந்தாதாரர்களாக பதிவு செய்துள்ளனர்.

    மேலும், திருவள்ளூர் நகரில் உள்ள ஓய்வுபெற்ற அலுவலர்கள், வீட்டில் இருக்கும் முதியவர்கள், பெண்கள், வியாபாரிகள், அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தினமும் இந்த நூலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

    இதுதவிர, இந்த மாவட்ட நூலகத்தின் கட்டுப்பாட்டில்தான் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 143 நூலகங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த நூலகக் கட்டடத்தின் கீழ்தளத்தில் ஒரு பகுதியில் வாசகர்களுக்காக வரிசையாக அலமாரிகளில் நூல்களும், மறுபக்கம் தினமும் வரும் வாசகர்கள் அமர்ந்து படிக்க அறையும் உள்ளன.

    மேலும், நூலகத்தின் மாடியில் அரசு தேர்வாணையத்தின் தேர்வர்களுக்குத் தேவையான புத்தகங்களும் அதை படிப்பதற்கான இடமும், கணினி இணையதள மையமும் இயங்கி வருகின்றன.

    மேலும், மாடியில் மாவட்ட நூலகர் அறை, நூல்களை பதிவு செய்பவர்கள் அறை உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.

    மாவட்ட மைய நூலகமாக இருப்பதால் இங்கு தினமும் திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், நூலகத்தில் கடும் இட நெருக்கடி உள்ளதால் வாசகர்கள் முதல் அலுவலர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த நூலகத்துக்கு ஆண்டுதோறும் புதிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கான பண்டல்களில் கட்டப்பட்டு கொண்டுவரப்படும். அந்த பண்டல்களில் இருந்து நூல்களை தரம்பிரித்து, அதற்கு முத்திரையிட்டு, நூல் எண் எழுதி, மாவட்டத்தில் உள்ள 143 நூலகங்களுக்கும் விநியோகம்

    செய்ய வேண்டும்.

    இந்தப் பணிக்கு குறைந்தபட்சமாக 2 மாதங்களும், அதிகபட்சமாக 4 மாதங்கள் வரையிலும் ஆகும். அந்தப் பணியை மேற்கொள்வதற்கும், நூல்களை வைக்க இடமில்லாததாலும் நூலக அலுவலர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    ஆண்டுதோறும் இந்த நூலகத்துக்கு பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே வருகின்றன.

    உதாரணமாக சான்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி, ரமணிசந்திரன், வாஸந்தி, தேவிபாலா, சுஜாதா உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மிகவும் குறைவாக வருகின்றன.

    இதுகுறித்து, மாவட்ட மைய நூலக அலுவலர் தனலட்சுமி கூறியது:

    தற்போது இந்த நூலகத்துக்கு 2012-13-ஆம் ஆண்டுக்கான நூல்கள் வந்துள்ளன. கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் இருந்து லட்சக்கணக்கான நூல்கள் வருவதால் அதை பாதுகாப்பாக வைக்கவும், அதை பிரிக்கவும் கடும் இட நெருக்கடி ஏற்படுகிறது.

    இதனால் விரிவான நூலகம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அருகில் இடம் ஒதுக்கித்தருவதாக கூறினர்.

    அந்த இடம் ஒதுக்குப்புறமாக உள்ளதால் மாற்று இடம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai