சுடச்சுட

  

  முன்விரோதம் காரணமாக மூதாட்டியைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

  திருவள்ளூர் மாவட்டம், மணலிபுதுநகர் காவல் எல்லைக்கு உள்பட்ட திருமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (32) என்பவருக்கும்  முன்விரோதம் இருந்து வந்தது.

  இந்நிலையில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் தேதி திருமலை கிராமத்தில் பிரகாஷின் உறவினர் இறந்தார். இதில் கலந்து கொள்வதற்காக பிரகாஷ், தனது மாமியார் முனியம்மாள் (67) என்பவருடன் அங்கு வந்தார். அங்கு ராஜேஷும் இருந்தார்.

  இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, முனியம்மாள் இருவரையும் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், அங்கிருந்த செங்கல்லால் முனியம்மாளின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முனியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து மணலி புதுநகர் காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் கொடுத்தார். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.

  இந்த வழக்கு, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் சௌந்தர்ராஜன் ஆஜரானார்.

  வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி பாலசந்திரன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வாசித்தார். அதில், மூதாட்டியைக் கொலை செய்த குற்றத்துக்காக ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai