சுடச்சுட

    

    செங்குன்றம், மாதவரம், புழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடரும் வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபடும் புதிய நபர்கள் குறித்த எந்தவிவரமும் கிடைக்கப் பெறாததால் அவர்களைப் பிடிக்க போலீஸார் திணறி வருகின்றனர்.

    செங்குன்றம், புழல், மாதவரம், சுற்று வட்டாரப் பகுதிகளில் நகைப் பறிப்புச் சம்பவங்கள் தினமும் நடந்து வருகின்றன.

    மேற்கண்ட பகுதிகளில் நடந்துச் சென்ற பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது.

    இதுபோன்று 30-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் 200 பவுன் தங்க நகைகள் பறிபோனதாக புகார்கள் உள்ளன.

    ஆனால் அதில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவ்வாறு பிடிபட்ட ஒரு சிலரிடம் இருந்து நகைகளும் திரும்ப கிடைக்கவில்லை.

    புழலை அடுத்த சூரப்பட்டு ஜெபி நகரைச் சேர்ந்தவர் பெண் ஒருவர், புழல் ஒன்றியம், கண்ணம்பாளையம் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

    கண்ணம்பாளையத்தில் வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் சனிக்கிழமை மாலை கண்ணம்பாளையம் நாகாத்தம்மன் கோயில் அருகே பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரிடம் விலாசம் கேட்பதுபோல் நடித்து, அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையைப் பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் அவரை தாக்கிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதேபோல் ஜூன் மாதம் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 4 பெண்களிடம் 28 பவுன் தங்க நகைகள் பறிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்கள் பதிவாகி உள்ளன.

    காரணம் என்ன? இதுகுறித்து குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியது: "குற்றச் சம்பவங்களில் பழையக் குற்றவாளிகள் ஈடுபட்டிருந்தால், சம்பவ இடத்தில் கிடைக்கும் ரேகைகளுடன், காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளில் உள்ள குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு அவை பொருந்தியிருந்தால் அவர்களைப் பிடித்து விசாரித்து உண்மையை வரவழைக்கலாம்.

    அவர்களும் நகைகளைப் பறித்தவுடன் வாகனத்தை மாற்றிவிட்டோ அல்லது வேறொரு வாகனங்களில் சென்றோ தப்பி விடுகின்றனர்.

    ஆனால் தற்போது நகைப் பறிப்பில் ஈடுபடுவோர் புதியவர்கள்.

    மேலும் 15 வயது முதல் 25 வயதுக்குள்ளானவர்களும், படித்து வேலை இல்லாதவர்களும், எதிர்பார்த்த வருமானம் இல்லாதவர்களும், சொகுசாக வாழ நினைப்பவர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    குற்றச் சம்பவங்களில் புதிதானவர்கள் தொடர்புடையதால், அவர்களின் கைரேகைகள், சுயக்குறிப்பு போன்றவை போலீஸாரின் கோப்புகளில் இருக்க வாய்ப்பில்லை. எனவே அவர்களை உடனே பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது' என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai