சுடச்சுட

    

    அனைத்து வாக்குச்சாவடிகளும் விடியோ மூலம் கண்காணிப்பு

    By திருவள்ளூர்  |   Published on : 18th September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் விடியோ மூலம் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    திருவள்ளுர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

    இந்தப் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் சிறப்புக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடனான முன்னேற்பாட்டு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

    வாக்குச்சீட்டுகள் விநியோகம் செய்தல், தேர்தல் பொருள்களை தயார் நிலையில் வைத்திருத்தல் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் விடியோ மூலம் கண்காணிக்கப்படும் என ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.

    மேலும், இந்தத் தேர்தலையொட்டி 37 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 19 ஆயிரத்து 820 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 9 ஆயிரத்து 800, பெண் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 20 பேர். வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வாக்களிக்க வரும்போது வாக்காளரிடம் வாக்குச்சாவடிச் சீட்டுகள் இருந்தால் வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை. வாக்குச்சாவடி சீட்டுகள் இல்லாத தருவாயில், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஏதேனும் ஒன்றை ஆவணமாக வாக்காளர்கள் எடுத்துச் சென்று வாக்களிக்கலாம்.

    தேர்தல் சுதந்திரமான முறையில் நடைபெற வாக்குப்பதிவு நேரத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விடியோ மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்துக்கும் ஒரு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் அவர்கள் கண்காணிப்பர் என்றார் அவர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் குமார், கோட்டாட்சியர்கள் பாண்டியன், மாரிமுத்து, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து தேர்தல் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai