சுடச்சுட

    

    ஊருக்குச் செல்லும் வழியை அடைத்துவிட்டதாகப் புகார்

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 18th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டி அருகே ஓபசமுத்திரத்துக்குச் செல்லும் குறுக்கு வழியை சுண்ணாம்புகுளம் கிராமத்தினர் அடைத்து விட்டதாக ஆரம்பாக்கம் காவல் நிலையம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் அம்பேத்கர் நகர் வழியே அருகில் உள்ள ஓபசமுத்திரம் பகுதிக்குச் செல்ல குறுக்கு வழி உள்ளது.

    இந்த வழியாகத்தான் ஓபசமுத்திரம் மக்கள், சுண்ணாம்புகுளம் வந்து கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

    கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பகுதி மக்கள் இந்த வழியைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த வழியை இரும்பு வேலி போட்டு அடைத்துவிட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆரம்பாக்கம் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகத்தில் இப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். ஓபசமுத்திரம் கிராம நிர்வாகி ஆறுமுகம், ஊராட்சி மன்றத் தலைவர் காளத்தி தலைமையில் பொதுமக்கள் அளித்த புகார் மனு: கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழியாக ஓபசமுத்திரம் பகுதிக்குச் சென்று வரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த வழியை அடைக்க சுண்ணாம்புகுளம் பகுதி கிராம நிர்வாகத்தார் முயன்று வந்தனர்.

    இந்நிலையில், ஊர் மக்கள் வழக்கம்போல் சென்று வர 3 அடி அகலத்தில் வழி விடக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அந்தப் பகுதி மக்கள் அதை ஏற்காமல் வழியை அடைத்து விட்டனர்.

    இந்த வழியை ஓபசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது குழிநாவல், சாலையன்கண்டிகை, காரைக்காடு குப்பம், சென்னாவரம், பூங்குளம், சின்னமாங்கோடு, பெரியமாங்கோடு உள்ளிட்ட கிராமப் பகுதி மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குறுக்குச் சாலை வழியாக, 5 நிமிடத்தில் சுண்ணாம்புகுளம் பேருந்து நிலையத்துக்கு வந்துவிட முடியும் என்ற சூழலில் இந்த வேலி அமைக்கப்பட்டதால் ஓபசமுத்திரத்தைச் சுற்றி சுண்ணாம்புகுளத்துக்கு வர 20 நிமிடங்களுக்கு மேல் ஆகும். இதனால், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

    எனவே, பல்வேறு கிராம பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் மேற்கண்ட பகுதியில் அடைக்கப்பட்ட வேலியை அகற்றி பொதுமக்கள் சென்று வர வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் குமாரிடம் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஓபசமுத்திரம் பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் ராஜேந்திரனிடமும், பிறகு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai