சுடச்சுட

    

    இறந்தவர் உடலை ஊருக்குள் அடக்கம் செய்ய எதிர்ப்பு

    By பொன்னேரி,  |   Published on : 20th September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழவேற்காட்டில் கோஷ்டி மோதல் காரணமாக அரங்கம்குப்பம் கிராமத்தில் உயிரிழந்த மீனவரின் சடலத்தைச் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

    பொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியான பழவேற்காட்டை சுற்றிலும் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

    அதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் கடல், பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

    அங்குள்ள கூனங்குப்பத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் கூனங்குப்பத்தில் வசித்து வரும் இரண்டு தரப்பினர் இடையே கடலில் மீன் பிடிப்பது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது.

    மோதல் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் கூனங்குப்பத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள அரங்கம்குப்பத்தில் தங்கியுள்ளனர்.

    இரு தரப்பினரையும் அழைத்து பொன்னேரி கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் கூனங்குப்பத்தை விட்டு வெளியேறி அரங்கம்குப்பத்தில் தங்கியிருந்த பிச்சை(50) என்பவர் உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர் பிச்சை சடலத்தை எடுத்துச் சென்று கூனங்குப்பம் சுடுகாட்டில் அடக்க செய்ய முயன்றபோது அங்கு வசித்து வரும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இரண்டு மீனவ கிராமங்களுக்கும் இடையில் உள்ள லைட் ஹவுஸ் குப்பத்தில் பிச்சையின் சடலத்தை வைத்து அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி வட்டாட்சியர் முரளி, திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பிச்சையின் சடலம் மாலை 4 மணி அளவில் எடுத்து செல்லப்பட்டு கூனங்குப்பம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

    போலீஸ் குவிப்பு... மேலும் இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai