Enable Javscript for better performance
வயதான தம்பதியினர் கொலை வழக்கு: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பூந்தமல்லியில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினரை கடந்த மாதம் கொலை செய்து பணம், நகையைக் கொள்ளையடித்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி திருமால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (60). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சாந்தி (55).

    ஆகஸ்ட் 10-ஆம் தேதி வயதான தம்பதியினர் இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பூந்தமல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வந்தனர்.

    பாபுவின் டைரியில் இருந்த கைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு பேசிய போது அதில் ஒருவரின் எண் மட்டும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போலீஸார் அதில் பேசிய சங்கர் என்பவரை விசாரித்தனர்.

    விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு சங்கர் அளித்த வாக்கு மூலம்:

    "நான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவன். முகப்பேரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்தேன். பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்து வந்தது.

    சொகுசு பங்களா, ஆடம்பர வாழ்க்கை என எனது கனவு திட்டத்தை டைரியில் எழுதி தினமும் படித்து வந்தேன். எனது கனவு திட்டதை நனவாக்க, எனது மனைவியின் உறவினர்கள் கணபதி (23), பாபு(21) ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டேன்.

    பிறகு நாங்கள் 3 பேரும் எந்தெந்தப் பகுதிகளில் வாடகைக்கு வீடு உள்ளது என நோட்டமிடுவோம்.

    அந்த வீடுகளுக்குச் சென்று வயதானவர்கள் யாராவது தனியாக இருந்தால் அவர்களை குறி வைத்து கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடிக்க முடிவு செய்தோம்.

    இந்த நிலையில் பூந்தமல்லி திருமால் நகரில் தனியாக வசித்து வரும் வயதான தம்பதியினரின் வீடு வாடகைக்கு உள்ளதை அறிந்து அங்குச் சென்றோம்.

    அங்கு சுவருக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வந்ததால் அப்போது எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை.

    அந்தப் பணி முடிந்ததும் அங்குச் சென்றோம். வாடகைக்கு உள்ளதாகக் கூறிய மேல் வீட்டை பார்ப்பது போல் பாபுவை அழைத்துச் சென்று அவரை அடித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தோம். பின்னர் கீழே, தனியாக இருந்த சாந்தியையும் கொலை செய்து அவர் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றோம்' என போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

    இதையடுத்து வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் பூந்தமல்லி போலீஸார் கைது செய்து அவர்களிடம் நகை, பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai