Enable Javscript for better performance
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை- Dinamani

சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை

  By திருவள்ளூர்,  |   Published on : 28th September 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தை அடுத்து, அதிமுகவினர் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர்.

  திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகில் ஒன்று கூடிய கட்சியினர் அங்கிருந்து ஜே.என். சாலை, ராஜாஜி சாலை, பேருந்து நிலையம், தேரடி, மோதிலால் தெரு, பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊர்வலமாகச் சென்று அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினர்.

  இதைத் தொடர்ந்து பெட்ரோல் பங்க்குகளில் ஊழியர்களையும் அடித்து பங்க்கை மூட வைத்தனர்.

  மேலும் சாலையில் சென்ற அரசு, தனியார் பேருந்துகளையும் நிறுத்தி பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டனர்.

  அந்த நேரத்தில் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பாட்டிலில் இருந்து பெட்ரோலை கருணாநிதியின் உருவம் இருந்த பேனரின் மீது ஊற்றினார்.

  அப்போது பெட்ரோல் சிதறி அங்கிருந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகரின் கால்சட்டையில் தீப்பிடித்தது. இதையடுத்து போலீஸார் அதிமுக நிர்வாகிள் மீது தடியடி நடத்தினார்.

  திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமையில் அதிமுகவினர் ஜே.என்.சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புல்லரம்பாக்கம் பகுதியில் ஒன்றியக்குழுப் பெருந்தலைவர் புட்லூர் ஆர்.சந்திரசேகர் தலைமையில் அதிமுகவினர் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கட்டைகள், கற்களை வீசினர்.

  திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் திருத்தணி- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வந்த கர்நாடக எம்எல்ஏ உள்பட அம்மாநில பதிவு எண் கொண்ட பல வாகனங்களையும், அதில் இருந்தவர்களையும் தாக்கினர்.

  திருவள்ளூரில் சில தனியார் பள்ளிகள் சனிக்கிழமை பள்ளிகளை நடத்தின. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காமல் வழக்கம்போல் 3 மணிக்கு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பினர்.

  கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மாணவிகள் பலர் செய்வதறியாது சாலையில் அழுதபடி அங்கிருப்பவர்களின் கைப்பேசிகளை வாங்கி பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களுடன் வீடுகளுக்குச் சென்றனர்.

  திருவள்ளூரில் உள்ள திரையரங்குகளுக்குச் சென்ற கட்சியினர் அங்கு படத்தை பாதியில் நிறுத்தும்படி தியேட்டர் நிர்வாகத்தினரை மிரட்டினர். இதையடுத்து மாலை, இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

  ரயில்களில் கூட்ட நெரிசல்

  திருவள்ளூர், செப்.பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரமுள்ள ரயில் நிலையத்துக்கு நடந்துச் சென்றனர். மேலும் பல பகுதிகளில் இருந்து பேருந்துகளில் செல்லும் பயணிகள் ரயில் நிலையத்துக்கு திரண்டதால் ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

  கும்மிடிப்பூண்டியில்...

  கும்மிடிப்பூண்டி, தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியான ஆரம்பாக்கத்தில் அ.தி.மு.க-வினர் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  சிந்தலக்குப்பத்தில் எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவர் பிரதாப் ரெட்டி, துணைத் தலைவர் சி.எம்.ஆர்.முரளி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்ராஜ் தலைமையில் அதிமுகவினர் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  கும்மிடிப்பூண்டி பஜார், புறவழிச் சாலை முழுதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

  பூவலம்பேட்டில் ஒன்றிய அதிமுக மகளிர் அணிச் செயலாளர் லோகாம்பாள் கருணாகரன் தலைமையில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் கவரப்பேட்டை - சத்தியவேடு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  பெரியபாளையம் மற்றும் வடமதுரை பகுதியில் வடமதுரை ஊராட்சி மன்றத் தலைவர் இ.கே.கோதண்டன் தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

  திருத்தணியில் கடையடைப்பு

  திருத்தணி, திருத்தணியில் அதிமுகவினர் மறியல், கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

  இதையடுத்து மாலை, திருத்தணி- அரக்கோணம் சாலையில் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் நீண்ட வரிசையில் பேருந்துகள் நின்றதோடு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  அதைத் தொடர்ந்து கருணாநிதியின் உருவப்படம், பொம்மையை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

  தொடர்ந்து நகரில் இருந்த கடைகளை மூடச் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அனைத்து அரசுப் பேருந்துகளும், திருத்தணி போக்குவரத்து பணிமனைக்குச் சென்றன.

  இதனால் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தனர். இதனால் நகர மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

  பொன்னேரியில்

  கடை அடைப்பு

  பொன்னேரி, பொன்னேரியில் அதிமுகவினர் கடைகளை மூட வலியுறுத்தியும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

  பொன்னேரி பழையப் பேருந்து நிலையத்தில் ஊர்வலமாகச் சென்ற கட்சியினர், ஹரிஹரன் பஜார், தேரடி சாலை, தாயுமான் செட்டித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்தினர்.

  மேலும் பழையப் பேருந்து நிலையம், தேரடிச் சாலை சந்திப்பு, தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தியன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  அதேபோன்று அரசு, தனியார் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதே போன்று சோழவரம், மீஞ்சூர், காரனோடை, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

  கடையடைப்பு, போக்குவரத்து முடக்கம் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

  அம்பத்தூரில்...

  அம்பத்தூர், அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

  அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் சந்திப்பிலும், கலெக்ட்ர் நகர் சந்திப்பிலும், பாடி- கொரட்டூர் சந்திப்பிலும், உருவ பொம்மைகளை எரித்தனர்.

  மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் மீது மர்மகும்பல் கல்லால் தாக்கியதில் கடையின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.

  மதுரவாயலில்: மதுரவாயல் பகுதியில் ஏரிக்கரை, வானகரம், மார்க்கெட் ஆகிய 3 இடங்களில் அதிமுகவினர் உருவ பொம்மைகளை எரித்தனர்.

  ஆவடி: ஆவடி ரயில் நிலையத்தில் திரண்ட 10 பெண்கள் உள்பட 50 அதிமுகவினர் மாலை புறநகர் ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் திருநின்றவூர் ரயில் நிலையத்திலும் அதிமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். வில்லிவாக்கம் தொடங்கி திருநின்றவூர் வரை கடைகள் அடைக்கப்பட்டன. இதில் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர்.

  பூந்தமல்லியில்...

  பூந்தமல்லி, போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்ட அதிமுகவினர் பேருந்துகளை வெளிவிடாமல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதேபோல் பூந்தமல்லி, குன்றத்தூர், நந்தம்பாக்கம் பகுதியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமியின் உருவபொம்மையை எரித்தனர்.

  இதேப்போல் பூந்தமல்லி, போரூர், அய்யப்பன்தாங்கல், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வணிகக் கடைகள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். பேருந்தில் சென்ற பயணிகளை பாதியிலேயே இறக்கிவிட்டதால் அவர்கள் நடந்தே சென்றனர்.

  செங்குன்றத்தில்...

  செங்குன்றம், செங்குன்றம், மாதவரம், கொளத்தூர், ரெட்டேரி ஆகிய பகுதிகளில் கட்சியினர் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்கள் வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  கொளத்தூர் பகுதியில் திமுக நிர்வாகி வீட்டின் மீது கற்களை எறிந்தனர். இதனால் அந்தப் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

  இதேபோல் செங்குன்றம் பகுதியில் உள்ள கடைகளில் கற்களை எறிந்து கண்ணாடியை உடைத்தனர்.

  இந்தச் சம்பவத்தில் சிறுமியின் மீது கற்கள் பட்டு தோளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

  செங்குன்றம்- ரெட்டேரி பகுதியில் சாலையில் செல்லும் பேருந்துகள் மீது கற்களையும், மற்ற பொருள்களையும் வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும்பாலான வாகனங்கள் பாதிக்கப்பட்டன. இதேபோன்று திரு.வி.க. நகர் பகுதியில் அனைத்து கடைகள் மூடப்பட்டு இருந்தன.

  இந்தச் சம்பவத்தால், செங்குன்றம், மாதவரம், புழல், ரெட்டேரி, கொளத்தூர், திரு.வி.க.நகர் என பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கடைகள் மூடப்பட்டன.

  ஊத்துக்கோட்டையில்...

  ஊத்துக்கோட்டை, பூண்டி ஒன்றியத்துக்குள்பட்ட சீத்தஞ்சேரி, ஒதப்பை, பெருஞ்சேரி, பென்னாலூர்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

  ஒதப்பையில் கிளைச் செயலாளர் சிகாமணி தலைமையிலும், பெருஞ்சேரியில் கிளைச் செயலாளர் நாராயணசாமி தலைமையிலும், சீத்தஞ்சேரியில் பூண்டி கூட்டுறவு சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமையிலும் திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

  இதேபோல் எல்லாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட வெங்கலை அடுத்த பூச்சிஆத்திபேடு கிராமத்தில் பஜாரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஒன்றிய அம்மா பேரவை பொருளாளர் குழந்தைவேலு தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெங்கல், தாமரைப்பாக்கம், மஞ்சங்காரணி உள்ளிட்ட ஊராட்சிகளில் உருவபொம்மைகளை

  எரித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai