சுடச்சுட

    

    திருவேற்காடு அருகே போதைப் பொருள்கள் தயாரித்த 2 மலேசியர்கள் கைது

    By பூந்தமல்லி,  |   Published on : 28th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவேற்காடு அருகே குடோனில் ரகசியமாக போதைப் பொருள்களை தயாரித்து வந்ததாக 2 மலேசியர்களை போலீஸார் கைது செய்தனர்.

    மலேசியாவைச் சேர்ந்தவர்கள் சரவணன் (32), ரிஷ்யாத் (27). நண்பர்களான இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை புறவழிச் சாலையில் மயக்க நிலையில் இருந்த இருவரையும் அவரது நண்பர் கணேஷ் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன், ரிஷ்யாத் இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் நசரத்பேட்டை போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.

    இந்த நிலையில், இறந்தவர்களின் உடல் உறுப்புகளில் போதைப் பொருள்கள் தயாரிக்கும் ரசாயனம் அதிகளவில் கலந்திருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் நசரத்பேட்டை ஆய்வாளர் அலெக்ஸ்சாண்டர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.

    விசாரணையில் இருவரும் திருவேற்காடை அடுத்த அயனம்பாக்கத்தில் போதைப் பொருள்கள் தயாரிக்கும் குடோனை நடத்தி வந்தது தெரியவந்தது.

    பின்னர் போலீஸார், தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று சோதனை செய்தபோது அங்கு மீத்தேல் ஆப்டிமைன் என்ற போதைப் பொருளை தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டு அதில் இருந்து வெளியான ரசாயனம் அதிக அளவில் உடலுக்குள் சென்றதால் இருவரும் உயிர் இழந்தது தெரியவந்தது.

    இதையடுத்து விசாரித்ததில் சரவணன், ரிஷ்யாத், கணேஷ் ஆகியோர் மலேசியாவில் போதை பொருள்கள் வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்பதும், வெளிநாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்யும் அனுமதி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    இவர்கள் கடந்த 6 மாதங்களாக சென்னையில் தங்கி திருவேற்காட்டில் குடோனை வாடகைக்கு எடுத்ததும் தெரியவந்தது.

    மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் போதைப் பொருள்கள் வழக்கில் மலேசியாவை சேர்ந்த யோகேஷ் (41) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதை அறிந்த சென்னை போலீஸார் யோகேஷை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் யோகேஷும் இவர்களின் கூட்டாளி என்பது தெரிய வந்துள்ளது.

    பின்னர் நசரத்பேட்டை போலீஸார் யோகேஷ், கணேஷ் ஆகிய இருவரையும் போதைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai