சுடச்சுட

  

  மணவாளநகர், காக்களூர் பகுதிகளில் இயல்பு நிலை

  By திருவள்ளூர்,  |   Published on : 29th September 2014 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்கள் முடிவுக்கு வந்து மணவாளநகர், காக்களூர், பூங்கா நகர், ராஜாஜிபுரம் ஆகிய பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது.

  தீர்ப்பை ஒட்டி, மாவட்டம் முழுவதும் சாலை மறியல், கடையடைப்பு, உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

  இதைத் தொடர்ந்து 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை பூந்தமல்லி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டமும், திருவள்ளூர், திருத்தணி, வெங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்புப் போராட்டமும் நடைபெற்றன.

  அம்பத்தூர், ஆவடி, சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இயல்பு நிலை திரும்பியது.

  திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன.

  திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், பூங்காநகர், ராஜாஜிபுரம், காக்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் இயங்கின. அதே போல் வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் வழக்கம் போல் இருந்தன.

  போலீஸார் தடியடி: ஒரு சில இடங்களிலும் இயல்பு நிலை திரும்பினாலும், பல இடங்களில் தொடர்ந்து 2-ஆவது நாளாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை காலை திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் பாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் கடையடைக்க வலியுறுத்தியும், பேருந்துகளை இயக்கக் கூடாது எனவும் போக்குவரத்து பணிமனை முன்பு போராட்டம் நடத்தினர்.

  அப்போது துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர், ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் அங்கு 2-ஆவது முறையாக அதிமுகவினர் மீது தடியடி நடத்தினர்.

  மேலும் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த கட்சியினரை கோயிலில் வைத்து போலீஸார் சமாதானம் செய்து அனுப்பினர்.

  இதையடுத்து அதிமுகவினர் அமைதியாக கலைந்துச் சென்றனர்.

  வெறிச்சோடிய மலைக் கோயில்

  திருத்தணி, அதிமுகவினர் சனிக்கிழமை நடத்திய போராட்டத்தால், ஞாயிற்றுக்கிழமையும் பேருந்துகள் இயக்கப்படாததால் முருகன் கோயிலில் பக்தர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சனிக்கிழமை பிற்பகல் முதலே திருத்தணி நகருக்கு பேருந்துகளை கட்சியினர் இயக்கவிடவில்லை.

  மேலும், திருத்தணியில் இருந்தும் வெளியூர்களுக்கும், பேருந்துகள் இயக்கப்படவில்லை.

  ஞாயிற்றுக்கிழமையும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

  இதனால், திருத்தணி முருகன் மலைக் கோயிலில், பக்தர்கள் மிக குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். குறிப்பாக, இரு சக்கர வாகனம், ஆட்டோ மூலம் பக்தர்கள் வந்திருந்தனர். தற்போது பள்ளியில் காலாண்டுத் தேர்வுகள் முடிவுற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோயிலுக்கு வருவர் என எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் இப்போராட்டத்தால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

  ரயில் மறியல்

  திருத்தணி, திருத்தணியில் இருந்து சென்னை செல்ல மின்சார ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.40 மணிக்கு தயாராக இருந்தது.

  அப்போது திருத்தணி நகர்மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகளை பணிமனைக்குக் கொண்டு செல்லுமாறு விரட்டி அடித்தனர்.

  பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஆந்திர மாநில பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால், மருந்துக் கடைகள் தவிர, அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

  ஆர்.கே.பேட்டையில்....

  தமிழக அரசின் தில்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி பி.எம்.நரசிம்மன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அதேபோல் ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சின்னநாகபூண்டியில் மாவட்ட கவுன்சிலர் கோ.குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பொன்னேரியில்...

  பொன்னேரி, பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் பஸ்கள் போதிய அளவு இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

  பொன்னேரி, மீஞ்சூர், காரனோடை, பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மேற்கண்ட ஊர்களில் கடைகள் தாமதமாக திறக்கப்பட்டன. அதே போன்று மாதவரம், அண்ணா நகர் பகுதிகளில் உள்ள சென்னைப் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து குறைந்த அளவிலான பேருந்துகள் பொன்னேரி பகுதிக்கு இயக்கப்பட்டன.

  விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு காலை 8 மணி வரை பேருந்துகள் இயக்கவில்லை.

  செங்குன்றத்தில்...

  செங்குன்றம், : செங்குன்றம் பகுதியில் ஜிஎன்டி சாலையில் இருபுறமும் திறந்திருந்த கடைகளை மூடுமாறு வலியுறுத்தினர்.

  பேருந்துகளும் இயங்காமல் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.

  ஏ.டி.எம். மையங்கள், அரசு மதுபானக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன.

  சாலையோரம் வைக்கப்பட்டிருந்த திமுக பேனர்கள் கிழித்தெறியப்பட்டன. செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் உள்ள நகர திமுக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

  அதேபோல் சோத்துப்பாக்கம் சாலையில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதில் கடைகளில் வேலை செய்த 4 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.

  நகர அவைத் தலைவர் உமாபதி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

  முன்னதாக செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே சுப்பிரமணியன் சுவாமி, கருணாநிதி, அன்பழகன் ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தனர்.

  பூந்தமல்லியில் கடையடைப்பு...

  பூந்தமல்லி, பூந்தமல்லியில் பேருந்து நிலையம், குமணன்சாவடி, கரையான்சாவடி, ஆவடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளைத் திறப்பதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  மேலும் வீதி வீதியாக சென்று திறந்த கடைகளை மூட செய்தனர். இதனால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிபட்டனர்.

  ஊத்துக்கோட்டையில்...

  ஊத்துக்கோட்டை, செப். 28: எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகில் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர். அனைத்துக் கடைகளும் இரண்டாவது நாளாக அடைக்கப்பட்டு இருந்தன.

  மேலும் பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடந்தது.

  உண்ணாவிரத்தை மாலை 5 மணிக்கு நகரச் செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் முடித்து தீர்ப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பூண்டி ஒன்றியத்திலும் இதே நிலை நீடித்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai