சுடச்சுட

    

    பிரதமர் மக்கள் நிதி திட்டத்தில் 300 பேருக்கு கணக்கு தொடக்கம்

    By திருவள்ளூர்  |   Published on : 30th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மத்திய அரசின் கருத்தொளி கண்காட்சியில் ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோர் பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கைத் தொடங்கினர்.

    மத்திய அரசின் திட்டங்களும், செயல்பாடுகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்கள் கருத்தொளி இயக்கம் சார்பில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு ஊடகப் பிரிவுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வுக் கண்காட்சியை தமிழகத்திலேயே முதன்முறையாக திருவள்ளூரில் தொடங்கியது.

    இந்தக் கண்காட்சியில், அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு தகவல்களும், நடைமுறைகளும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

    இந்தக் கண்காட்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இந்தக் கண்காட்சியில் மத்திய அரசின் பிரதமர் மக்கள் நிதித் திட்டம், அதிநவீன நகர திட்டம், ஸ்வலம்பன் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், அனைவருக்கும் கல்வி, பிரதமரின் சிறுபான்மையினர் நலத் திட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முன்னோடி திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்களது படைப்பான உணவு வகைகள், கவரிங் நகைகள், துணி வகைகள், விதவிதமான கைப்பைகள் உள்ளிட்ட  பல்வேறு படைப்புகளை அங்கு மக்களின் பார்வைக்கு வைத்து விற்பனையும் செய்தனர்.

    மேலும் திருவள்ளூரில் உள்ள அனைத்து வங்கி நிர்வாகத்தினரும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று தங்களது கடைகளை அமைத்து கண்காட்சிக்கு வந்த மக்களுக்கு பிரதமரின் மக்கள் நிதி திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வங்கிக் கணக்கை தொடங்கினர்.

    இதில் 300-க்கும் மேற்பட்டோர் வங்கிக் கணக்கை தொடங்கினர்.

    இதைத் தொடர்ந்து மகளிர் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், நடனங்கள், கல்வி தொடர்பான பேச்சுப் போட்டி, திரைப்படப் பாடல்கள் ஆகியவற்றை மகளிர் குழுவினர் நடத்தி பார்வையாளர்களை அசத்தினர்.

    இந்த நிகழ்ச்சியின்போது, ஊடக தகவல் அலுவலர் சண்முகம், முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்ளிட்ட உதவி அலுவலர்கள் தேவராஜ், அஸ்வின் ஆகியோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து நடைபெறும் கருத்தரங்கில் மத்திய அரசின் பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி கற்பிப்போம், தூய்மையான பாரதம், திறன், மேம்பாடு, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai